இருமுடி கட்டு – விமர்சனம்

இருமுடி கட்டு, ரவி தேஜாவின் நடிப்பிலும் சிவா நிர்வாணாவின் இயக்கத்திலும் வெளியாகியிருக்கும் இந்தத் தெலுங்குப் படம், அப்பா-மகள் பாசம், ஆன்மீகம், குற்றத் திரில்லர் மற்றும் மாஸ் கலந்த உணர்ச்சிப்பூர்வமான கதையைச் சொல்கிறது. எளிமையான கதையை வலிமையாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லும் விதத்தில் படம் அமைந்திருக்கிறது.

விவசாயியான ரவி தேஜாவுக்கும் பிரியா பவானி சங்கருக்கும் ஒரு மகள் இருக்கிறார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்த அவருக்கு ஐயப்பன் சாமிக்கு மாலை அணிந்து வேண்டிய பிறகு பிறந்த குழந்தை என்பதால், மகள் மீது கொண்டிருக்கும் அளவற்ற அன்பைப் போலவே ஐயப்பன் மீதும் ஆழ்ந்த பக்தி கொண்டிருக்கிறார். அதேநேரம் அதீத மதுப்பழக்கமும் உடையவர். ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடுமையான விரதம் இருக்கிறார். இந்நிலையில், அவரது மகள் படிக்கும் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். தொடர்ந்து மற்றொரு மாணவி திடீரெனப் படிப்பை நிறுத்திவிட்டுத் தலைமறைவாகிறார். ஆசிரியை சுவாசிகா சிறப்பு வகுப்பு என்ற பெயரில் சில மாணவிகளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். மாணவிகளைச் சுற்றி நடக்கும் இந்த மர்ம சம்பவங்களின் பின்னணி ரவி தேஜாவின் மகளுக்குத் தெரியவருகிறது. அதைத் தந்தையிடம் சொல்லி அவர்களைக் காப்பாற்ற நினைக்கிறார். ஆனால் தந்தையின் மதுப்பழக்கமும் ஐயப்பன் மாலையும் தடையாக நிற்கின்றன. அந்தத் தடை நீங்கி, மகள் சொல்ல நினைத்தது தந்தைக்குத் தெரிந்ததா, மாணவிகளைக் காப்பாற்றினாரா என்பதை உணர்ச்சிகரமாகவும் மாஸாகவும் விவரிக்கும் கதையே இருமுடி கட்டு.

மாஸ் மகாராஜா என்ற பட்டத்துடன் அறியப்படும் ரவி தேஜா, இப்படத்தில் தன் வழக்கமான மாஸைக் குறைத்துக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மகள் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் மிகவும் இயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நடித்திருக்கும் அவர், பெண் பிள்ளைகள் அனைவரையும் தன் மகள்களாகப் பார்ப்பதே தன் பலவீனம் என்று சொல்லி அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கிறார். மனைவியாக வரும் பிரியா பவானி சங்கரும் மகளாக நடிக்கும் சிறுமி நக்‌ஷத்ராவும் தங்கள் நடிப்பால் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிகிறார்கள். குறிப்பாக நக்‌ஷத்ரா தன் பார்வைகளாலேயே பல்வேறு உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார். சாய் குமார், அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, சுவாசிகா உள்ளிட்ட பிற நடிகர்களின் திரை இருப்பு கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா, குற்றத் திரில்லர், அப்பா-மகள் உணர்வு மற்றும் மாஸ் ஆகிய மூன்று பரிமாணங்களையும் தன் கேமரா மூலம் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் டப்பிங் படம் போலல்லாமல் அசல் படம் போல் ஒலிக்கின்றன. பின்னணி இசை அப்பாவின் அன்பையும் தொடர்புடைய காட்சிகளையும் கண்கலங்க வைக்கும் வகையில் பார்வையாளர்களின் மனதில் பதிய வைக்கிறது. அமைதியான குடும்ப நாடகம், திரில்லர், மாஸ், வணிக அம்சங்கள் மற்றும் சமூக அறிவுரை ஆகியவை அனைத்தும் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் தொகுப்பாளர் பிரவீன் பவுடி காட்சிகளை அமைத்திருக்கிறார்.

எழுதி இயக்கிய சிவா நிர்வாணா, எளிய கதையை மிக வலிமையாகச் சொல்லும் திறனைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மாஸ் ஹீரோவை வைத்து ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதோடு, கதையின் போக்கை மாற்றாமல் சொல்ல வந்த விஷயத்தைப் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிறார்.

தொடக்கத்திலிருந்தே பயணிக்கும் அப்பா-மகள் பாசமும் மாணவிகளின் பிரச்சினைகளும் கதையைச் சுவாரஸ்யமாகவும் எதிர்பார்ப்புடன் நகர்த்திச் செல்கின்றன. இரண்டாம் பாதியில் வரும் எதிர்பாராத திருப்பம் இதயங்களைக் கனக்கச் செய்து, இறுதி வரை பார்வையாளர்களை இருக்கை நுனியில் உட்கார வைத்துவிடுகிறது.

Read Previous

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

Read Next

ஒன்ஸ்மோர் – டிரைலர் வெளியீட்டு விழா