தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறையின் ரத்தம் பாய்ச்சப்பட்டு வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் ‘அருவி’. பல கோடிகளில் பட்ஜெட் வேண்டாம், சில கோடிகளில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்கள் வேண்டாம், சிறந்த கதையைப் படமாக்கத் துணியும் தயாரிப்பாளர் கிடைத்தால் போதும், தமிழ் சினிமா, தரமான சினிமாவாக மாறும் என்பதற்கு ‘அருவி’ படமே சாட்சி. அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், அடுத்தடுத்து அருவியாய் அவருடைய திறமையைக் கொட்ட வேண்டும் என வாழ்த்துவோம்.
இப்படிப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவுக்குத் தேவை என தொடர்ந்து வித்தியாசமான படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் டிரீம் வாரியர் பிக்சர்ஸ், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோருக்கும் நமது வாழ்த்துகள்.
கதை
வாழ்க்கையை சுவாரசியமாகவும், சுவையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் பெண் அதிதி பாலன். அப்படிப்பட்டவருடைய உடல்நிலையில் ஒரு பேரதிர்ச்சி நிகழ்கிறது. பெற்றவர்களால் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார். திருநங்கை அஞ்சலி வரதன், அதிதிக்கு அன்பாக இருந்து அடைக்கலம் கொடுக்கிறார். நெருங்கிய தோழிகளாக மாறுகிறார்கள், ஒன்றாக வேலைக்குப் போகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அதிதி ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவருக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து, நியாயம் கேட்கிறார்கள். அங்கும் அவர் அலைக்கழிக்கப்பட அவர் எடுக்கும் முடிவும், அதன் பின் நடக்கும் சம்பவங்களும்தான் படத்தின் கதை.
இயக்கம்
படத்தின் கதையை முழுவதுமாக சொல்லிவிட்டால் அதன் புரிதலும், ஈர்ப்பும் குறைந்துவிடும். அந்த பேரதிர்ச்சி என்ன என்பதை நமக்கும் கிளைமாக்சுக்கு முன்பாகத்தான் புரிய வைக்கிறார் இயக்குனர். அதுதான் படத்தை வேறு ஒரு தளத்தில் கொண்டு சேர்க்கிறது. அருண் பிரபுக்கு இது முதல் படம் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். அவ்வளவு ஒரு முதிர்ச்சியுடனும், பக்குவத்துடனும் இந்தப் படத்தின் கதையை சிறந்த திரைப்படமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நடிப்பு
‘அருவி’ ஆக அதிதி பாலன். இயக்குனர் எந்த அளவிற்கு படத்தை மனதுக்குள் வைத்திருந்து படத்தையும், நாயகி கதாபாத்திரத்தையும் உருவாக்கினாரோ, அதே அளவிற்கு அதற்கு தன் நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார் அதிதி. அந்த சிரிப்பும், பார்வையும், திமிரும், கடைசியில் விவரிக்கவே முடியாத அந்த சோகமும், வேறு எந்த ஒரு முன்னணி ஹீரோயின் நடித்திருந்தால் கூட இப்படி இருக்குமா என்பது சந்தேகம்தான்.
திருநங்கை ஒருவருக்கு தமிழ் சினிமா இந்த அளவிற்கு இதுவரை இப்படி ஒரு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. திருநங்கை அஞ்சலி வரதன், அவருடைய இயல்பான நடிப்பில் ஆச்சரியப்பட வைக்கிறார். ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ டிவி குழுவினர்களில் இயக்குனர் கவிதா பாரதி, தொகுப்பாளர் லட்சுமி கோபால்சாமி, மற்றும் உதவி இயக்குனர்கள், செக்யூரிட்டி, புரொடக்ஷன் பையன் என ஒவ்வொருவரும் நமக்கு ‘லைவ்’ நடிப்பைக் காட்டியிருக்கிறார்கள்.
இசை
பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இசையில் படத்தின் துவக்கத்தில் வரும் பாடலும், அதன் பின் வரும் மான்டேஜ்ஜிற்கான பின்னணி இசையும் படத்துக்குள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக் கொள்கின்றன. ஷெல்லி கேஸ்ட்டின் ஒளிப்பதிவு, ரேமான்ட் டெரிக் கிராஸ்டா படத் தொகுப்பு, சிட்டி பாபுவின் படத் தொகுப்பு அனைத்தும் ‘அருவி’ தடையின்றி கொட்டுவதற்கு வழி செய்துள்ளன.
படத்திற்கு +
இயக்கம், கதை, கதாபாத்திரத் தேர்வு, நடிப்பு, கிளைமாக்ஸ்….
படத்திற்கு –
வருடத்திற்கு ஓரிரு படங்கள்தான் இப்படி சிறப்பான படங்களாக வருகின்றன. சிறு குறைகள் இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே…