முதல் நாள், முதல் காட்சி படம் பார்க்க வரும் ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் சிம்புவும் ஒரு முக்கியமான நடிகர்.
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்குப் பிறகு பெண்களுக்கும் பிடித்த ஒரு நடிகராக மாறினார்.
இப்படி தனக்கென ரசிகர்களைக் வைத்துக் கொண்டிருக்கும் அவர், அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக கொஞ்சமாவது மெனக் கெட்டு ஒரு படத்தைக் கொடுத்து தொடர்ந்து ரசிகர்களைத் தக்க வைத்துக் கொள்ள எவ்வளவு செய்ய வேண்டும்.
‘மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா’ என படம் வெளியாவதற்கு முன்பு கொடுத்த எவ்வளவி ‘பில்ட்-அப்’புகளை படத்தின் கதையில் பொருத்தமாக வைக்க யோசிக்க வேண்டாமா ?.
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என எதற்கு தலைப்பு என்பது தெரியவில்லை. அவ்வளவு அற்புதமான ஒரு தலைப்பையும் சேர்த்து வீணடித்திருக்கிறார் இயக்குனர் ஆதிக்.
மதுரை மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில், மதுரையை மிரள வைக்கும் ஒரு அடியாளாக சிம்பு. அவருக்கும் ஸ்ரேயாவுக்கும் காதல். ஒரு சந்தர்ப்பத்தில் போலீசிடம் சிக்கிக் கொள்ளும் சிம்புவை, அவர் நண்பர்களும், பகுதி மக்களும் சேர்ந்து சிறையிலிருந்து தப்பிக்க வைக்கிறார்கள். ஸ்ரேயாவுக்கு திருமணம் நடக்க இருப்பதால்தான் அந்த தப்பிக்கும் வைபவம். ஆனால், ஸ்ரேயா கல்யாணத்தைத் தடுத்து நிறுத்தாமல், ஸ்ரேயா நன்றாக இருக்கட்டும் என துபாய் செல்கிறார் சிம்பு. இதெல்லாம் ஒரு பிளாஷ் பேக்.
25 வருடங்களுக்குள், வளர்ந்து பெரிய டான் ஆகிறார். துபாய் போலீசுக்கே சிம்பு யார் எனத் தெரியாது. ஆனால், அவரோ 50 வயதைக் கடந்தவராக அஸ்வின் தாத்தா என்ற பெயரில் சென்னையில் இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு தமன்னா மீது காதல் வருகிறது. 50 வயதைக் கடந்தவருக்கு இளம் பெண் தமன்னா மீதுடனான காதல் என்ன ஆகிறது என்பதுதான் இந்த முதல் பாகத்தின் கதை.
மதுரை மைக்கேல் கதாபாத்திரத்தில் மட்டும் தன்னுடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்தியிருக்கிறார் சிம்பு. அதிலும் அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளுமே பில்ட்-அப் காட்சிகள்தான். இந்த ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றி கதை வளர்ந்திருந்தாலே சுவாரசியமாக இருந்திருக்கும். அப்புறம் ஏன், துபாய், அஸ்வின் தாத்தா என்பதெல்லாம் தெரியவில்லை. அதிலும் தாத்தா கதாபாத்திரத்தில் என்ன மேக்கப்போ, என்ன நடை, உடை, பாவனையோ…குண்டான அனுஷ்காவையே ஒல்லியாக மாற்றும் இந்தக் காலத்தில் பள்ளிகளில் மாறுவேடப் போட்டிக்கு மேக்கப் போட்டது போல ஒரு தோற்றம். இன்னும் அவர் பேசும் காதல் டயலாக்குகள், மக்களே மறந்து போன டயலாக்குகள். உங்களுக்கு என இருக்கும் ரசிகர்களையாவது கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் சிம்பு.
ஸ்ரேயா, 80களில் நடக்கும் கதைக்கான நாயகி. சிம்புவைப் பார்க்கிறார், யார் என்று தெரிந்தும் காதலிக்கிறார். சிம்புவுடன் சினிமா பார்க்கிறார், சிம்புவைத் திருந்த வேண்டும் என்று சொல்கிறார். கொடுத்த வேலையை செய்துவிட்டுப் போகிறார்.
இரண்டாவது பாதியில்தான் தமன்னா. தமிழ் சினிமாவில் எதற்காக வருகிறோம், போகிறோம் என்று தெரியாமலேயே சில படங்களில் நாயகிகள் வருவார்கள், போவார்கள். பாவம் தமன்னா, அவரிடம் என்னவென்று கதை சொன்னார்களோ..?.
நகைச்சுவை என்ற பெயரில் உங்களைப் படாத பாடு படுத்தும் ஒய்.ஜி.மகேந்திரா, விடிவி கணேஷ், ராஜேந்திரன், கோவை சரளா. அதிலும் ஒவ்வொரு முறை ஒய்.ஜி.மகேந்திரா ஸ்விட்சைத் தொடும் போதும் ஷாக் அடிக்குமாம், உடனே சிம்பு வாயை வைத்து அவர் உயிரைக் காப்பாற்றுவாராம். எப்படிப்பா இப்படிலாம் யோசிக்கிறீங்க. ‘ஒன்ஸ்மோர்’ சிவாஜி கெட்-அப்பில் ஒருவரை மதுரை தாதாவாக நடிக்க வைத்திருக்கிறார்கள். சிவாஜியை இதைவிடக் கேவலப்படுத்த முடியாது.
வழக்கம் போல எதுகை, மோனை இல்லாத வாக்கியங்களைப் பாடலாக்கியிருக்கிறார்கள். பேசுவதைப் போல் உள்ள வாக்கியங்கள் எல்லாம் பாடல் என்பதை சிம்பு விடமாட்டார் போலிருக்கிறது. ஒரு காலத்தில் ‘காதல் வளர்த்தேன், லூசுப் பெண்ணே’ போன்ற பாடல்களைக் கொடுத்த யுவன் – சிம்பு கூட்டணி இந்தப் படத்தில் இசை ரசிகர்களையும் ஏமாற்றியிருக்கிறது.
நாம் செய்யும் வேலைக்கு கொஞ்சமாகவாவது நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அந்த சின்சியாரிட்டியே நம்மை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தும். உங்களையும் ஏமாற்றிக் கொண்டு ரசிகர்களையும் ஏமாற்றாதீர்கள் சிம்பு.