‘விண்ணைத் தாண்டி வருவாயா, கோ’ படங்களைத் தயாரித்த ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விடுதலை’.
பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.
இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும், முதல் பாகம் விரைவில் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்து அதன் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இரண்டாம் பாகத்திற்காக சில காட்சிகள் மட்டும் படமாக்க வேண்டி உள்ளதாம். அதற்கான படப்பிடிப்பு தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் நடந்து வருகிறது.
சமீபத்தில் இப்படத்திற்காக 10 கோடி ரூபாய் செலவில் ஒரு ரயில்வே பாலம் செட் அமைக்கப்பட்டு, ரயில் பெட்டிகளும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.
ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பயிற்சியில் பல்கேரியாவில் இருந்து வந்த ஸ்டண்ட் கலைஞர்களுடன் சூரியும், விஜய் சேதுபதியும் மோதும் சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது.
இளையராஜா – வெற்றிமாறன் கூட்டணி என்பதாலும், சூரி முதன் முதலாக கதையின் நாயகனாக நடிப்பதாலும், விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இப்போது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனமும் இந்தப் படத்தை வெளியிட உள்ளதால் அது இன்னும் அதிகரித்துள்ளது.