‘தொட்டு விடும் தூரம்’ – நண்பனுக்காக நண்பர்கள் தயாரித்த படம்

உஷா சினி கிரியேஷன்ஸ், ரக்ஷந்த் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நாகேஷ்வரன் இயக்கத்தில், நோவா இசையமைப்பில், விவேக்ராஜ், சின்ன கொட்ல மோனிகா, சீதா, பாலசரவணன், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தொட்டு விடும் தூரம்’.

படத்தை இயக்கியிருக்கும் நாகேஷ்வரன் படம் பற்றி கூறுகையில்,

“இந்தப் படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறேன். எல்லார் மனசையும் தொடற மாதிரிதான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன். கிராமத்துல இருந்து நாயகன், நாயகியைத் தேடி வராரு. அவங்களுக்கான பயணம்தான் இது. அவங்களோட சந்திப்பு எப்படி அமையுதுங்கறதுதான் இந்தப் படத்தோட கதை. படத்துல சோஷியல் மெசேஜும் இருக்கு. அது இந்தப் படத்தோட ஹைலைட்.

இளம் பெண்கள் இருக்கிற இடத்துல, வேலைக்கு வைக்கிற ஆட்களைப் பார்த்து வைக்கணும். நம்பிக்கையானவங்களைத்தான் நாம வேலைக்கு வைக்கணும். அப்படி இல்லாதவங்களை வச்சா அது எந்த மாதிரியான பாதிப்புகளைக் கொடுக்குதுங்கறது படத்துல இருக்கும்.

நாகர்கோவிலை சுத்தி, கடல், மலை, ஆறுகள், வயல் சார்ந்த அருமையான இடங்களில் இப்படம் படமாக்கி இருக்கிறோம்.

அம்மா, பையனுக்கான பேமிலி சென்டிமென்ட்டும் படத்துல இருக்கு. விவேக்ராஜ், இந்தப் படத்துல நாயகனா நடிச்சிருக்காரு. ‘ஜீனியஸ், ஜீவி, தோழர் வெங்கடேசன்’ படங்கள்ல நாயகியாக நடிச்ச சின்ன கொட்ல மோனிகா நாயகியா நடிச்சிருக்காங்க. சீதா, சிங்கம்புலி, பாலசரவணன் ஆகியோரும் நடிச்சிருக்காங்க.

நோவா என்கிற புது இசையமைப்பாளர் 5 பாடல்களை மிக அருமையா பண்ணியிருக்காரு.

இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்கிறது என்னோட நண்பர் ராமநாதன். நான் காலேஜ் படிச்ச காலத்துல அவருடைய வீட்டுல தங்கிதான் படிச்சேன். அவர் கூடப் பிறந்தவர் மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டாரு. எனக்காக அவரும் நண்பர்களும் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்காரு. தடை பட்டு நின்ன இந்தப் படத்தை கை தூக்கி விட்டது அவங்கதான்.

ஜனவரி 3ம் தேதி படம் வெளியாகுது. எல்லாரும் பார்க்கிற மாதிரியான ஒரு படமா இந்தப் படம் இருக்கும்,” என்கிறார் இயக்குனர்.

Read Previous

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘கட்டில்’

Read Next

இன்று ஜனவரி 3, 2020 வெளியாகும் திரைப்படங்கள்…