விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் சீசன் 2 இன்றுடன் நிறைவு பெறுகிறது.
‘சரவணன் மீனாட்சி’ தொடர் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் சீசனில் சரவணன் ஆக மிர்ச்சி செந்தில், மீனாட்சியாக ஸ்ரீஜா செந்தில் ஆகியோர் நடித்தனர். முக்கிய கதாபாத்திரங்களில் ராஜசேகரன், குயிலி ஆகியோர் நடித்தனர்.
ஒரு கட்டத்தில் முதல் பாகத்தை திடீரென நிறைவு செய்து அடுத்து வேறு நட்சத்திரங்களுடன் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்தனர். அதில் சரவணன் ஆக இர்ஃபான், மீனாட்சியாக ரக்ஷிதா நடித்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் இர்ஃபான் இத் தொடரிலிருந்து விலகினார்.
அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் நடிக்க தொடர் தொடர்ந்தது. திடீரென அந்தக் கதாபாத்திரத்தை கனடாவிற்கு அனுப்பி விட்டு, அந்த சரவணன் இல்லாமலே தொடர் ஒளிபரப்பாகி வந்தது. மீனாட்சியின் மற்றொரு முறை மாமனான வேட்டையன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை மாற்றினார்கள். அன்றிலிருந்து இத் தொடர் ‘வேட்டையன் மீனாட்சி’யாக மாறியது.
வேட்டையனுக்கும், மீனாட்சிக்கும் திருமணம் நடத்தி கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்கள். மீனாட்சி வேட்டையனை கணவராக ஏற்காமல் தள்ளியே இருந்தார். ஒரு விபத்தில் மீனாட்சிக்கு பழைய நினைவுகள் மறந்துவிட்டது என்று அடுத்த திருப்புமுனையை ஏற்படுத்தினார்கள்.
ஒரு வழியாக வேட்டையனும், மீனாட்சியும் பல தடைகளை மீறி ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். இந்த நிலையில் இந்த ‘சரவணன் மீனாட்சி 2’ தொடரை இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வருகிறார்கள். 1209ம் அத்தியாத்துடன் இரண்டாம் பாகம் இன்றுடன் முடிவடைகிறது.
வரும் திங்கள் முதல் ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாக உள்ளது. அதில் சரவணன் ஆக தொலைக்காட்சி தொகுப்பாளர் ரியோ நடிக்கிறார். மீனாட்சியாக இரண்டாம் சீசனில் நடித்த ரக்ஷிதாவே மீண்டும் நடிக்கிறார்.
இன்னும் எத்தனை ஆண்டுகள், எத்தனை சீசன் ‘சரவணன் மீனாட்சி’ தொடரும் என்பது விஜய் டிவிக்கே வெளிச்சம்….