‘டாணாக்காரன்’ எனது திறமையை வெளிப்படுத்தும், விக்ரம் பிரபு நம்பிக்கை

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் தமிழ் இயக்கத்தில், விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘டாணாக்காரன்’. 

ஏப்ரல் 8ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் இயக்குநர் தமிழ்  பேசுகையில்,

“என்னுடைய படத்துக்கு இத்தனை ஆசீர்வாதங்கள் கிடைத்திருப்பது என்னைப் போன்ற ஒரு இயக்குநருக்கு மிகவும் பெருமை. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்திய ஓடிடி தளங்களில் சிறந்து விளங்கும் முன்னணி ஓடிடி அடையாளமாக மாறியுள்ளது, அத்தளத்தில் சிறந்த திரைப்படங்கள் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டு, பரந்த அளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. 

டாணாக்காரன் திரைப்படத்தின் மீது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆர்வம் காட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கதையின் மீது நம்பிக்கை வைத்த எனது தயாரிப்பாளர்களான S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, P.கோபிநாத் மற்றும் R.தங்க பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி. 

இந்த ஸ்கிரிப்டை வைத்து நான் பல தயாரிப்பு நிறுவனங்களை அணுகியபோது, முதலில் அனைவரும் தயங்கினர், திரைக்கதையில் பல மாற்றங்களை செய்யப் பரிந்துரைத்தனர். ஆனால், பொட்டன்ஷியல் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்கள் அத்தகைய மாற்றங்கள் எதையுமே சொல்லவில்லை, இது எனக்கு மிகுந்த ஆச்சரியம் அளித்தது. 

மேலும் எனது இயக்கத்தில் எந்த குறையும் வராமல் இருக்க, அவர்கள் ஒரு பெரிய பட்ஜெட்டை படத்திற்காக  செலவழித்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்த விக்ரம் பிரபு சாருக்கு நன்றி. அவர் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார், மேலும் அவரது நடிப்பை பார்வையாளர்கள் விரும்புவார்கள், பெரிதும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன். 

அஞ்சலி நாயர், லால் சார், எம்.எஸ்.பாஸ்கர் சார் மற்றும் இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞரும் படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறார்கள். ஏப்ரல் 8, 2022 முதல், ரசிகர்களின் பாராட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார். 

நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில்,

“டாணாக்காரன்’ என்ற தலைப்பே மிகவும் அழுத்தமாக இருந்தது, இந்த ஸ்கிரிப்டைக் கேட்ட பிறகு, இதில் நடித்தே ஆக வேண்டும் என முடிவு செய்தேன். ஒரு நடிகராக எனது திறமையை வெளிப்படுத்தும் படைப்பாக இப்படம் இருக்கும். தமிழ் திரையுலகில் படைப்பாற்றல் மற்றும் திறமையாளர்களை கண்டெடுத்து, வளர்க்கும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் போன்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவது, ஒரு அற்புதமான அனுபவம். தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லையென்றால், டாணாக்காரன் இவ்வளவு திருப்திகரமான வெளியீட்டைக் கண்டிருக்க முடியாது. 

இயக்குநர் தமிழ் இந்தப் படத்தை தன் உயிராக வடிவமைத்து,  மிக அற்புதமான படைப்பாகச் செதுக்கியுள்ளார். டாணாக்காரன் படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்திருக்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் வெளியீட்டுக்கு நன்றி. டாணாக்காரன் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

Read Previous

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ‘காதல் காதல்தான்’

Read Next

ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’

Most Popular