ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கி இருக்கிறார் சூர்யா.
இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தற்போது சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படம், இந்திப் படம் ‘கர்ணா’, சுதா கொங்காரா படம், லோகேஷ் கனகராஜ் படம், ரவிக்குமார் படம் என தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா.
இதனிடையே, ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்றால் ஏஜென்ட் ஒருவரை நியமிக்க வேண்டும். அவர் அங்குள்ள நிறுவனங்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரை சந்தித்து சூர்யா குறித்து பேசி, புகைப்படங்கள், வீடியோக்கள் காண்பிப்பார். அவை பிடித்திருந்தால் ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்வார்கள்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா என்பதால், இந்தப் பணிகளில் பெரிய பின்னடைவு இருக்காது. தற்போது சூர்யாவிற்கு என்று தனியாக ஏஜென்ட் ஒருவரை நியமித்துள்ளனர். அவர் ஹாலிவுட் நிறுவனங்களை சந்திக்க தொடங்கிவிட்டார் என்கிறார்கள்.
ஆகையால், 2025-ம் ஆண்டு ஹாலிவுட் படத்தில் சூர்யா நடிக்கவிருப்பது குறித்த அறிவிப்பினை எதிர்பார்க்கலாம் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.