சிஷ்யன் மிஷ்கினை இயக்கும் குரு ஆர்கே செல்வா

‘பிரியமுடன்’, ‘யூத்’, ‘ஜித்தன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா, ஆர்கே செல்வா என பெயரை மாற்றிக் கொண்டு இயக்கும் படம் ‘சுப்ரமணி’.

தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் பரபரப்பான கிரைம் திரில்லரான  ‘சுப்ரமணி’ திரைப்படத்தில் இயக்குநர் செல்வாவின் உதவியாளராக விஜய் நடித்த ‘யூத்’ மற்றும் ஜித்தன் ரமேஷ் நடித்த ‘ஜித்தன்’ திரைப்படங்களில் பணியாற்றிய மிஷ்கின் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ரிச்சர்ட் ரிஷி மற்றும் நட்டி என்கிற நட்ராஜன் சுப்பிரமணியம் முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘சுப்ரமணி’ திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் ஆர் கே செல்வா,

“இப்படத்தில் மிஷ்கினை இயக்கியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை ஏற்றிராத மிக முக்கிய கதாபாத்திரத்தை அவர் இப்படத்தில் ஏற்று நடித்துள்ளார், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் என்னுடைய உதவி இயக்குநராகவே மீண்டும் மாறி அவர் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். சில காட்சிகளையும் அவர் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிச்சர்ட் ரிஷி மற்றும் நட்டியும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். ஐந்து கொடூர கொலை சம்பவங்களை மூன்று காவல் அதிகாரிகளின் பார்வையில் வெவ்வேறு கோணங்களில் அணுகி இந்த படு பாதக சம்பவங்களை செய்யும் இருண்ட அரக்கனை மேலும் குற்ற சம்பவங்கள் நிகழ்வதற்குள் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை விவரிக்கும் வகையில் திரைக்கதையை இப்படத்தில் அமைத்துள்ளோம். வித்தியாசமான கதைக்களங்களை எப்போதும் வரவேற்கும் தமிழ் ரசிகர்கள் இப்படத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

‘சுப்ரமணி’ திரைப்படத்தில் பிரணவ் மற்றும் பாலாஜி ப்ராஜெக்ட் ஹெட் ஆகவும் இணை தயாரிப்பாளர்கள் ஆகவும் பணியாற்றியுள்ளனர். அப்சல் பெய்க் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். தயாரிப்பு நிர்வாகி: எம். ஜெ. பாரதி

தெலுங்கு பிக்பாஸ் புகழ் திவ்யா ‘சுப்ரமணி’ படத்தின் நாயகியாக நடித்துள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ் புகழ் ஜாஸ்பர், லொள்ளுசபா சுவாமிநாதன் இப்படத்தில் நடித்துள்ளனர். அகிலேஷ் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணன் ‘சுப்ரமணி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்’ புகழ் சனுக்யா இசையமைக்க அஸ்மின் பாடல்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை டான் மேக்ஸின் உதவியாளரான சுஜிர் பாபு கையாள சண்டை பயிற்சிக்கு ராம்போ விமல் பொறுப்பேற்றுள்ளார். எஃபக்ட்ஸ்: சேது, விஎஃப்எக்ஸ்: சுனில் (69 ஷேட்ஸ்), டிசைன்ஸ்: குமரன் கே, மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர்கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின், ரிச்சர்ட் ரிஷி, நட்டி நடிக்கும் ‘சுப்ரமணி’ திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடும் பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

Read Previous

பிப்ரவரி 6ல் ‘வித் லவ்’ ரிலீஸ்

Read Next

த பெட் – விமர்சனம்