’சக்திமான்’ படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதால் கைவிடப்படதாக வெளியான தகவலுக்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டிடி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடர் ‘சக்திமான்’. 1997-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. முகேஷ் கன்னா உருவாக்கி நடித்த இந்தத் தொடர், குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாகும்.
நீண்ட நாட்களாக இந்தத் தொடரை மையப்படுத்தி படமொன்றை உருவாக்க இந்தி திரையுலகம் திட்டமிட்டு வந்தது. இறுதியாக ‘மின்னல் முரளி’ படத்தினை இயக்கிய பாசில் ஜோசப், ‘சக்திமான்’ படத்தினை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் சக்திமானாக நடிக்க ரன்வீர் சிங் ஒப்பந்தமாகி உள்ளார். ‘ஸ்பைடர் மேன்’ படங்களை தயாரித்த சோனி பிக்சர்ஸ் நிறுவனம், இந்தப் படத்தினை தயாரிக்கவுள்ளது.
கடந்த சில தினங்களாக ‘சக்திமான்’ படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதால், இந்தப் படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இது இந்தி திரையுலகினர் பெரும் பேசும் பொருளாக விவாதிக்கப்பட்டது.
தற்போது, இந்தப் படத்தின் தயாரிப்பு கைவிடப்படவில்லை என்றும், இன்னும் தயாரிப்பில் தான் உள்ளது என்று சோனி நிறுவனத்தின் இந்திய தலைவர் லடா குருதன் சிங் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.