‘ரஜினி 171’ படத்தில் ரன்வீர்சிங் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
’லியோ’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய அறிமுக டீஸர் ஏப்ரல் 22-ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ரஜினியின் லுக்குடன் கூடிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்தப் படத்தில் ரஜினியுடன் ரன்வீர் சிங் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரன்வீர் சிங் பல பேட்டிகளில் தமிழ் சினிமா, தென்னிந்திய இயக்குநர்கள் என பலரைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இங்குள்ள பல விழாக்களில் கலந்தும் கொண்டுள்ளார்.
ஆனால், எந்தவொரு தமிழ் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில்லை. முதன்முறையாக ‘ரஜினி 171’ படத்துக்காக நடைபெற்றுள்ளது. ஆனால், ரன்வீர் சிங் தரப்பிலிருந்து என்ன சொன்னார்கள் என்பது தெரியவில்லை.
ஏப்ரல் 22-ம் தேதி வெளியாகவுள்ள அறிமுக டீஸர் வெளியீட்டில், ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தெரியவரும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் மற்றும் எடிட்டராக பிலோமின் ராஜ் ஆகியோர் பணிபுரியவிருப்பது உறுதியாகியுள்ளது.