‘திருடன் போலீஸ், உள்குத்து, கண்ணாடி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு ‘சூர்ப்பனகை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்து பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்க உள்ள புதிய படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார்.
கொரானோ தொற்று காரணமாக ‘சூர்ப்பனகை’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கி முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அந்தப் படத்தையும் தானே தயாரிப்பதாக ‘சூர்ப்பனகை’ படத்தின் தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மா தெரிவித்துள்ளார்.
பார்வையாளர்களை அடுத்த காட்சி என்ன என்று யூகிக்க முடியாத நிலையிலும், அதே வேளையில் நல்ல காமெடியுடனும் இந்த த்ரில்லர் இருக்கும் என்கிறது படக்குழு.
படம் பற்றி இயக்குனர் கார்த்திக் ராஜு கூறியதாவது,
“திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை இந்தக் கதைக்கு ஏற்ற களமாக இருந்தது. கொரோனா தொற்று இல்லாத அந்த கிராமத்தில் 500-க்கும் குறைவான குடும்பங்களே வசிக்கிறார்கள். படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டது. முழுபடப்பிடிப்பும் முடித்து திரும்பிவிட்டோம், தற்போது எடிட்டிங் வேலைகளும் முடிந்துவிட்டது. டப்பிங் பணிகள் தொடங்க உள்ளது.
இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரைப் பற்றிய படம். ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் பதிப்பில் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் 'கைதி' படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எமோசனலான த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருக்கும்," என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் ராஜு.
விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.