தமிழ் சினிமா 2017 – அதிகப் படங்களில் நடித்த நடிகை யார் ?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகமாகும் நடிகர்களை விட நடிகைகள்தான அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். அது இந்த 2017ம் ஆண்டிலும் தொடர்கிறது.

இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த நடிகைகளில் நிக்கி கல்ரானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹரஹர மகாதேவகி’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் ‘மரகத நாணயம், ஹரஹர மகாதேவகி’ ஆகிய படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்ற படங்கள்.

நயன்தாரா நடிப்பில், “டோரா, அறம்” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. ‘வேலைக்காரன்’ படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. ‘அறம்’ படத்தின் மூலம் நயன்தாரா தனி பாராட்டைப் பெற்றார்.

ரெஜினா கசன்ட்ரா நடித்து ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன், மாநகரம்’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ‘மாநகரம்’ படம் ரெஜினாவுக்கு நல்ல படமாக அமைந்தது.

ஆன்ட்ரியா நடித்து ‘தரமணி, துப்பறிவாளன், அவள்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்த மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படங்களாகவும் அமைந்தன.

வரலட்சுமி சரத்குமார் நடித்த, “விக்ரம் வேதா, நிபுணன், சத்யா” ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளன. இந்த மூன்று படங்களுமே வரலட்சுமிக்கு குறிப்பிடத்தக்க படங்களாக அமைந்துள்ளன.

காஜல் அகர்வால் நடித்து ‘விவேகம், மெர்சல்’ ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. ஒரே ஆண்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார் காஜல்.

கீர்த்தி சுரேஷ் நடித்து ‘பைரவா, பாம்பு சட்டை’ ஆகிய படங்கள் வெளிவந்தன. கடந்த வருடத்தைப் போல கீர்த்திக்கு இந்த வருடம் சிறப்பாக அமையவில்லை.

அமலா பால் நடித்து, ‘வேலையில்லா பட்டதாரி 2, திருட்டுப் பயலே 2’ ஆகிய படங்களும், மகிமா நம்பியார் நடித்து ‘குற்றம், கொடி வீரன்’ ஆகிய படங்களும் வெளிவந்தன. ஒரே வருடத்தில் இரண்டாவது பாகமாக வெளிவந்த இரண்டு படங்களில் நடித்தவர் என்ற பெருமையை அமலா பால் பெறுகிறார்.

அனுஷ்கா நடித்து, ‘சி 3, பாகுபலி 2’ ஆகிய படங்கள் வெளிவந்தன. ‘பாகுபலி 2’ படத்தில் அனுஷ்காவின் ‘தேவசேனா’ கதாபாத்திரம் அவரைப் பெரிதும் பேச வைத்தது.

சமந்தா நடித்து ‘மெர்சல்’ படம் மட்டுமே வெளிவந்தது. ஹன்சிகா நடித்து ‘போகன்’ படம் தான் வெளிவந்தது. ஸ்ருதிஹாசன் நடித்து ‘சி 3’ படம் மட்டுமே வெளிவந்தது. த்ரிஷா நடித்து இந்த வருடம் ஒரு படம் கூட வெளிவரவில்லை.

இந்த ஆண்டில் அறிமுகமான புதுமுக நடிகைகளில் சிலரும் ரசிகர்களைக் கவர்ந்தார்கள். அவர்களைப் பற்றி வேறொரு செய்தியில் பார்ப்போம்.

 

Read Previous

‘அனிருத்’ படத்திற்கு பாடல் எழுதிய 7 பாடலாசிரியர்கள்

Read Next

ஷங்கர், கமல் படத்திற்காக விஜய், அஜித் படங்களை மறுத்த அனிருத் ?