‘சவரக்கத்தி’-யின் சவால் – இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா

அறிமுக இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா இயக்கத்தில் அரோல் கொரேலி இசையமைப்பில் ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சவரக்கத்தி’.

தன் முதல் படத்தில் மிஷ்கின், ராம் போன்ற இயக்குனர்களை நடிகர்களாக நடிக்க வைத்து படமாக்கியதின் அனுபவம் எப்படி இருந்தது என படத்தின் இயக்குனர் ஆதித்யா கூறியதாவது,

“இந்தக் கதையை எழுதும் போதே நாங்கள் சிரித்து சிரித்துதான் எழுதினோம். படத்தின் கதையோட்டம் சீரியஸ் ஆகத்தான் இருக்கும். ஆனால், அதில் ‘காமெடி பிளே’ நிறையவே இருக்கம். சோகமும், இன்பமும் கலந்ததுதான் காமெடி.

‘சவரக் கத்தி’ ஒரு கற்பனைக் கதைதான். ராம் ஒரு ‘பார்பர்’ கடை வைத்திருப்பவர். எப்போதுமே பொய் சொல்லிக் கொண்டேயிருக்கும் ஒரு மனிதர். நானும் ஒரு ரௌடிதான் என சொல்லித் திரிந்து கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். மிஷ்கின் ஒரு உண்மையான ரௌடி. பொய் சொல்ற ஒருவர் யாரிடமும் என்ன வேண்டுமானாலும் சொல்லி சுற்றித் திரியலாம். ஆனால், படத்தில் பொய் பேசும் ராம் கதாபாத்திரம் உண்மையான ரௌடியான மிஷ்கினிடம் சென்று நானும் ரௌடிதான் என சொன்னால் என்ன ஆகும் ?.

பொய் சொல்லிக் கொண்டேயிருக்கும் ராம், எதற்கெடுத்தாலும் கோபப்படும் மிஷ்கின், இவர்கள் இரண்டு பேருக்கும் நடுவில் நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை. இவர்களுக்கு இடையில் ‘சுபத்ரா’ என்ற ராம் மனைவி கதாபாத்திரத்தில் பூர்ணா. இவருக்கு காது கேட்காது. ராம் ஒன்று பேசிக் கொண்டிருப்பார், அதற்கு பூர்ணா வேறு ஒரு பதில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். காரைக்குடி பக்கத்தில் இருந்து வந்த ஒரு கதாபாத்திரம், அடிக்கடி பழமொழி சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

ராம் சாரைப் பார்த்து பழகிய அனுபவம் உண்டு. அவருடைய உடல் மொழி, பேச்சு அனைத்தையும் கவனித்தவன் நான். ஏன் அவரை இந்தப் படத்தில் நாயகனாக போடக் கூடாது என நினைத்தேன். ஒரு யதார்த்தமான, எளிமையான முகமாக, ‘பிச்சைமூர்த்தி’ கதாபாத்திரத்தில் அவ்வளவு இயல்பாக நடித்திருப்பார்.

ராம் இந்தப் படத்திற்காக எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் அப்படியே கேட்டு நடித்தார். மிஷ்கின் சார் இயக்கிய படங்கள் வேறு மாதிரியான படங்கள் இருக்கும். அவர்கள் இருவரும் ஒரே படத்தில் எப்படி என்று பலரும் கேட்டார்கள். அவர்கள் இருவரையும் வைத்து படத்தை உருவாக்குவது ஒரு சவாலான விஷயம்தான். இருவருமே அவர்களது நடிப்பில் வேறு ஒரு கோணத்தைக் காட்டியிருப்பார்கள்,” என்கிறார் இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யா.

‘சவரக்கத்தி’ பிப்ரவரி 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Read Previous

‘விஸ்வாசம்’ – அஜித் ஜோடியாக நயன்தாரா

Read Next

‘ஜிப்சி’ இந்தியா முழுவதும் படமாகும் கதை