தமிழ்த் திரையுலகில் கடந்த சில வருடங்கள் முன் வரை நம்பர் 1 நகைச்சுவை நடிகராக இருந்தவர் சந்தானம்.
அவருக்கும் நாயகனாக நடிக்க ஆசை. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான்’ ஆகிய இரண்டு படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால், இரண்டுமே தோல்வியாக அமைந்தன.
விஜய் டிவியில் சந்தானத்திற்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்த ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படம் 2016ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது.
சந்தானம் நடித்து கடந்த வருடம் வெளிவந்த ‘சக்க போடு போடு ராஜா’ படுதோல்வியைத் தழுவியது. அவர் நடித்து முடித்த ‘சர்வர் சுந்தரம்’ வெளியீடும் இழுபறியாக இருக்கிறது.
செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ‘மன்னவன் வந்தானடி’ ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படம் ஓடி முடிந்ததா என்று தெரியவில்லை.
அதனால், மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க ‘தில்லுக்கு துட்டு’ இயக்குனர் ராம்பாலாவை அழைத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கச் சொன்னார். அனைத்து வேலைகளும் முடிந்து இன்று படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார்கள்.
‘தில்லுக்கு துட்டு’ படத்திற்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ்குமார், வடிவேலு நடிக்கும் படத்தில் ஒப்பந்தமானார் ராம் பாலா. ஆனால், வடிவேலு செய்த டார்ச்சரால் அந்தப் படம் கைவிடப்பட்டது என்றார்கள். அடுத்து ‘டாவு’ படத்தை இயக்க ஒப்பந்தமானார் ராம்பாலா. அந்தப் படமும் ஆரம்பமாவது போலத் தெரியவில்லை. அதனால் ராம்பாலாவும் சந்தானம் பக்கம் வந்துவிட்டார்.
ஹைதராபாத்தில் இன்று ஆரம்பமான ‘தில்லுக்கு துட்டு 2’ படப்பிடிப்பு அங்கேயே தொடர்ந்து நடைபெற உள்ளது.