‘பூமராங்’ படத்தில் தேசப்பற்று பாடல்

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘பூமராங்’.

அதர்வா, மேகா ஆகாஷ், உபன் பட்டேல் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்காக கலை இயக்குனர் ஷிவா யாதவ் ஒரு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான செட் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த செட்டில் சமீபத்தில் பாடலைப் படமாக்கி முடித்திருக்கிறார்கள்.

இது பற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது,

“ஒரு முக்கியமான மற்றும் வலுவான சமுதாய கருத்தைக் கொண்ட ஆக்ஷன் படம் தான் ‘பூமராங்’. இப்படத்தில் தேசப் பற்று பாடல் ஒன்று உள்ளது. இந்த பாடலிற்காக முற்றிலும் வித்யாசமான செட் அமைக்கலாம் என்பதற்காக ஒரு மிகப் பிரம்மாண்ட செட்டை அமைத்தோம்.

இசையமைப்பாளர் ரதன் மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் எனது இந்த கனவை அழகாக புரிந்து கொண்டு நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான பாடலைத் தந்துள்ளனர்.

கலை இயக்குனர் ஷிவா யாதவின் பிரம்மாண்டமான செட்டும் பிருந்தாவின் அசத்தலான நடன இயக்கத்திலும் இந்தப் பாடல் மேலும் சிறப்பாகியுள்ளது. சுமார் 2000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் நமது சினிமா துறையின் சிறந்த 100 நடனக் கலைஞர்கள் இந்த பாடலில் உள்ளனர்.

‘மேயாத மான்’ படத்தில் நடித்து ரசிகர்களிடம் சிறந்த பெயர் வாங்கிய இந்துஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். மிகவும் சவாலான கதாபாத்திரம் அது. அந்த வேடத்தில் நடிக்கும் நடிகையர் தேர்வு நடக்கும் போது என் குழுவினர் அனைவரின் ஏகோபித்த தேர்வு இந்துஜாதான். அந்த அளவுக்கு முதல் படத்திலேயே அவர் இந்த பெயர் வாங்கியது பெரிய விஷயம்.

திட்டமிட்ட படி படப்புடிப்பு மிக வேகமாகவும் அருமையாகவும் நடந்து வருகிறது,” என்றார்.

Read Previous

ரஜினிகாந்தை விமர்சித்த கமல்ஹாசன்

Read Next

‘2.0’ ரிலீஸ் தீபாவளிக்கும் கிடையாதா ?