21வது கொல்லப்புடி சீனிவாஸ் தேசிய விருது ‘எ டெத் இன் தி குன்ஞ்’ (A Death In The Gunj) என்ற பெங்காலி மொழி படத்தை இயக்கிய கொன்கொனா சென் ஷர்மாவுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் படம் மூலம் கொன்கொனா சென் இயக்குனராக அறிமுகமானார்.
பிரபல இயக்குனரும், நடிகையுமான அபர்ணா சென் மகள்தான் கொன்கொனா. 2003ம் ஆண்டு வெளிவந்த மிஸ்டர் அன்ட் மிசஸ் ஐயர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். 2007ல் வெளிவந்த ‘ஓம்காரா’ படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.
பல பெங்காலி, ஹிந்தி, ஆங்கிலப் படங்களில் நடித்துள்ள கொன்கொனா கடந்த வருடம் A Death In The Gunj படத்தை ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலத்தில் இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.
சிறந்த அறிமுக இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருதை இந்தப் படத்திற்காகப் பெற்றார்.
இப்போது கொல்லப்புடி சீனிவாஸ் விருதைப் பெற உள்ளார். நாடு முழுவதும் இருந்து தேர்வுக்காக வந்த ஆங்கிலம், மலையாளம், தமிழ், அசாமி, பெங்காலி, மராத்தி, கன்னடம் ஆகியப் படங்களில் இருந்து கொன்கொனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்வுக்குழுவில் இயக்குனர் சிங்கீதம் சினிவாசராவ், ஸ்வர்ணமால்யா கணேஷ், கவிதாலய கிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றனர்.
1998ம் ஆண்டிலிருந்து கொல்லப்புடி சீனிவாஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. 1992ம் ஆண்டில் தன்னுடைய முதல் படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது, விபத்தில் இறந்த கொல்லப்புடி சீனிவாஸ் நினைவாக இந்த விருது உருவாக்கப்பட்டது.
அறிமுக இயக்குனர்களுக்காகவே இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கான அங்கீகாரத்தையும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்திலும் இந்த விருதை வழங்கி வருகிறார்கள்.
கடந்த 19 வருடங்களில் சுனில்தத், ஜெயாபச்சன், நஸ்ரிதீன் ஷா, மிருணாள் சென், கோவிந்த் நிஹ்லானி, மணிரத்னம், சேகர் கபூர், அடூர் கோபாலகிருஷ்ணன், அபர்ணா சென், மம்முட்டி, நாகேஸ்வரராவ், தாசரி நாராயணராவ், சுப்பராமி ரெட்டி, ஷபனா ஆஸ்மி, ஷர்மிளா தாகூர், ஆமீர்கான், ஷோபனா, கௌதம் கோஸ், அனில் கபூர், வித்யா பாலன், மதுர் பண்டார்கர், விஷால் பரத்வாஜ், சத்ருகன் சின்ஹா, லட்சுமி, பாலுமகேந்திரா, ரிஷி கபூர், சிரஞ்சீவி, ஜெயசுதா, கௌதம் மேனன், பிரகாஷ் உள்ளிட்டோர் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கொன்கொனாவுக்கு ஒன்றரை லட்ச ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்பட உள்ளது.