சிம்ரன், த்ரிஷா என் ரோல் மாடல் – அம்ரிதா

‘படை வீரன்’ படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து, தன்னுடைய எளிமையான அழகால் பலரையும் கவனிக்க வைத்தவர் அம்ரிதா.

இப்போது ‘காளி’ படத்தில் விஜய் ஆண்டனியின் ஜோடிகளில் ஒருவராக நடித்துள்ளார். தன் திரையுலக ஆரம்பம் பற்றி அம்ரிதா கூறுகையில்,

“நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு ‘படை வீரன்’ பட வாய்ப்பைப் பெற்று தந்தது.

விஜய் ஆண்டனி சாரின் இசையையும், அவரது நடிப்பையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். மிகப் பெரிய உயரங்களைத் தொட்ட பிறகும் மிகவும் அடக்கமாக, எளிமையாக இருக்கும் அவரது பண்பைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். படப்பிடிப்பில் ஒரு தோழராக மிகவும் நன்றாகப் பழகினார். நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என் நடிப்பை பாராட்ட அவர் தவறியதே இல்லை. அது எனக்கு ஊக்கமளித்தது. அது என்னை இன்னும் மெருகேற்றிக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக நான் மிகவும் பதட்டப்படும் நெருக்கமான காதல் காட்சிகளில் நிறையவே உதவி செய்வார்.

‘படை வீரன்’ படத்தின் பாடல் வீடியோ ஒன்றை பார்த்துதான் கிருத்திகா மேடம் என்னை ‘காளி’ படத்துக்காகத் தேர்ந்தெடுத்தார். மிகவும் இனிமையாவர், குறிப்பாக ஒரு பெண் இயக்குனர் படத்தில் வேலை பார்த்தது எனக்கு வசதியாக இருந்தது. நான் அசௌகரியமாக உணரும் காட்சிகளில் எனக்கு உதவியாக இருந்தார். அவருடைய தொடர்ச்சியான ஊக்கம் இன்னும் நன்றாக நடிக்க வைத்தது.

சிம்ரன், திரிஷா ஆகியோர் தான் என் ரோல் மாடல். அவர்களின் படங்களை பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷன். சிம்ரன் ஒரு சிறந்த நடிகை, தான் நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னை நிரூபித்தவர். அசத்தும் நடனம், எமோஷனல் நடிப்பு, உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதாகட்டும் அனைத்திலும் சிறந்தவர். அதே மாதிரி தான் நடிகை திரிஷாவும், பல ஆண்டுகளாக நடிகையாக பயணித்து வந்தாலும் தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பது அவரின் பெரும் சாதனை,” என்கிறார்.

Read Previous

மூத்த இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் மறைவு

Read Next

‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் நடிக்கும் ‘சில்க்’