மூத்த இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார், அவருக்கு வயது 81.
தமிழ்த் திரையுலகத்தின் மற்றுமொரு முக்கியமான இயக்குனரான சி.வி. ஸ்ரீதரின் சகோதரர் தான் சி.வி.ராஜேந்திரன்.
உதவி இயக்குனராக தன்னுடைய திரைப்பயணத்தை ஆரம்பித்தவர். 1967ம் ஆண்டு வெளிவந்த ‘அனுபவம் புதுமை’ படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானார்.
தொடர்ந்து ‘கலாட்டா கல்யாணம், நில் கவனி காதலி, சுமதி என் சுந்தரி, ராஜா, என் மகன், சிவகாமியின் செல்வன், வாணி ராணி, உல்லாசப் பறவைகள், கர்ஜனை, சங்கிலி, சந்திப்பு, வாழ்க்கை, பெருமை, ஆனந்த், சின்னப்பதாஸ்’ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்களை இயக்கியிருக்கிறார்.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களை இயக்கியுள்ளார். நடிகர் பிரபுவை ‘சங்கிலி’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகப்படுத்தினார்.
விஜய் நடித்த ‘ஒன்ஸ்மோர்’ படத்தையும், பிரபு நடித்த ‘வியட்நாம் காலனி’ படத்தையும் தயாரித்தவர்.
1989ம் ஆண்டு வெளிவந்த ‘சின்னப்பதாஸ்’ படம் அவர் கடைசியாக இயக்கிய திரைப்படம்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடித்த ‘குறிஞ்சி மலர்’ என்ற டிவி தொடரையும், ‘கோகிலா எங்கே போகிறாள்’ என்ற தொடரையும் இயக்கியவர்.