தனுஷ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், நானா படேகர், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்க ஜுன் 7ம் தேதி வெளியாக உள்ள படம் ‘காலா’.
இப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள டிவி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது. நான்கு மொழிகளுக்குமாகச் சேர்த்து ஒளிபரப்பு உரிமை விலை 75 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் தயாரிப்புச் செலவு சுமார் 100 கோடி என்கிறார்கள். படத்தின் வினியோக உரிமையை லைக்கா நிறுவனம் ஏற்கெனவே வாங்கிவிட்டது. அந்த உரிமையை 100 கோடி கொடுத்து வாங்கியதாக ஒரு தகவல்.
இப்போது டிவி ஒளிபரப்பு உரிமை 75 கோடி என்றால் அது படத்தின் தயாரிப்பாளர் தனுஷுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய விலை. இந்த இரண்டு உரிமைகளில் மட்டும் 175 கோடி ரூபாய் வருமானம் வந்துவிட்டது. இன்னும் டிஜிட்டல் உரிமை, மற்ற உரிமைகள் உள்ளன.
‘காலா’ படத்தின் மூலம் மட்டுமே படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் குறைந்தபட்சம் 100 கோடி வரையில் லாபம் பார்க்கலாம் என கோடம்பாக்க வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
‘காலா’ படத்தின் தயாரிப்புச் செலவைப் பொறுத்து கணக்கிடும் போது டிவி உரிமை விலையான 75 கோடி பெரிய விலை. 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் ‘2.0’ படத்தை ஜீ டிவி 110 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. அதனுடன் ஒப்பிடும் போது ‘காலா’ பெரிய விலைதான்.
விஜய் டிவி வசம் இதுவரை ரஜினிகாந்த் நடித்த படத்தின் டிவி ஒளிபரப்பு உரிமை இருந்தது இல்லை. முதல் முறையாக ரஜினிகாந்தின் பெரிய படம் ஒன்றை அவர்கள் பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.
‘துப்பாக்கி, கும்கி, சிறுத்தை’ படங்கள் போன்று ‘காலா’ படம் தேய்ந்து கட்டெறும்பு ஆகும் வரை அடிக்கடி ஒளிபரப்பிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.