‘காஷ்மீர்…பியூட்டிஃபுல் காஷ்மீர்….’ என தமிழ் சினிமா கதாநாயகர்கள் பலர் பாடி நம்மை ரசிக்க வைத்த காஷ்மீரில் தமிழ் சினிமா ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று நீண்ட வருடங்களாகி விட்டது.
கடைசியாக ரஜினிகாந்த், அமலா நடித்த ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வா வா கண்ணா வா’ பாடல்தான் படமாக்கப்பட்டது.
தற்போது நீண்ட வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் விக்ரமன் ‘நினைத்தது யாரோ’ படத்திற்காக இரண்டு பாடல்களை காஷ்மீரில் படமாக்கியுள்ளார்.
காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திய அனுபவத்தைப் பற்றி அவர் கூறுகையில்,
“தமிழ்நாட்டிலிருந்து படப்பிடிப்புக்கு வந்திருக்கிறோம் என்றவுடன் காஷ்மீர் போலீஸ் தங்களது படையுடன் வந்து பாதுகாப்பு கொடுத்து எந்த தொந்தரவும் இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற ஒத்துழைப்பு கொடுத்தனர்.
எனக்கு தெரிந்து ரஜினி நடித்த ‘வேலைக்காரன் ’ படத்திற்குப் பிறகு ‘நினைத்தது யாரோ’ படப்பிடிப்பை நாங்கள்தான் காஷ்மீரில் நடத்தி இருக்கிறோம்.
காஷ்மீரில் படப்பிடிப்பு என்றவுடன் வேண்டாமே பாதுகாப்பு, பிரச்சனை ஏற்படுமே என்று நிறைய நண்பர்கள் பயமுறுத்தினர். ஆனால், எந்த பிரச்சனையுமே ஏற்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.
இப்படத்திற்காக ரஜித் – நிமிஷா பங்கேற்ற , “கொஞ்சம் புன்னகை, கொஞ்சம் காதல், அழகிய காதல் ” என்ற பாடலும், ‘மனசே லேசா, ரிங்கா ரிங்கா ரோசா” என்ற பாடலும் காஷ்மீரில் உள்ள பெகல்காம் என்ற இடத்தில் ராபர்ட் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.
பத்தடிக்கு ஒரு ராணுவ வீரர் என்ற கணக்கில் காஷ்மீர் முழுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அரண் அமைத்து நம்மை பாதுகாக்கிறார்கள் .
முழுக்க முழுக்க புதிய நடிகர்களை வைத்து இளைய தலைமுறை ரசிகர்களை வைத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன்,” என்றார் இயக்குனர் விக்ரமன்.