ஐபிஎல்: இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

csk-logo

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றது. நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் – குவாலிஃபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

6வது ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இறுதிப் போட்டிக்கு தேர்வாகும் அணிகள் எவை என்பதற்கான பிளே ஆஃப் போட்டிகள் நேற்று ஆரம்பமானது. முதல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தோற்கும் அணி இன்று நடைபெறும் எலிமிமேனட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் விளையாடும் மற்றொரு அணியாக தகுதி பெறும்.

இந்த நிலையில் நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

மைக் ஹஸ்ஸியும், முரளி விஜய்யும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த நிலையில் முரளி விஜய் பொல்லார்ட் பந்தில் சிக்சர்  அடிக்க முயன்று ஸ்மித்திடம் காட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின் மைக் ஹஸ்ஸியுடன் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாட ஆரம்பிக்க, மறு முனையில் மைக் ஹஸ்ஸியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தனர். இருவரது வேகத்தையும் கட்டுப்படுத்த மும்பை பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது.

20 ஓவர் முடிவில் ஹஸ்ஸியும், ரெய்னாவும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 12.4 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்ட உதவியது.

மைக் ஹஸ்ஸி 58 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 86 ரன்களும், சுரேஷ் ரெய்னா 42 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ருடன் 82 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல்  இருந்தனர்.

மும்பை அணி தரப்பில் பொல்லார்ட் மட்டும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். மற்ற பந்து வீச்சாளர்களால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் போனது.

பின்னர் , மும்பை அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஸ்மித் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 68 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்தர ஜடேஜா பந்து வீச்சில் சுரேஷ் ரெய்னாவிடம் காட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதன் பின்னர் மும்பை அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. பொல்லார்ட் மட்டும் 24 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஸ்மித், தினேஷ் கார்த்திக்,  பொல்லார்ட்,  ஆகியோரது விக்கெட்டுக்களை ரவீந்தர ஜடேஜா கைப்பற்றினார்.

பிராவோ 3 ஓவர்கள் பந்து வீசி 9 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

கடைசியில் மும்பை அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் மும்பை அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது. இன்று ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் அணியுடன் நடக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மீண்டும் ஒரு முறை குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ஆட வாய்ப்பு உண்டு. இதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் ஆடலாம்.

சென்னை அணி இதுவரை நடைபெற்ற 6 ஐபிஎல் போட்டிகளில் 5 முறை இறுதிச் சுற்றில் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2009ல் மட்டும் இறுதிப் போட்டியில் நுழையவில்லை.

நேற்றைய ஆட்டத்தில் மைக் ஹஸ்ஸி இந்த 6வது  ஐபிஎல் போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி ஒட்டு மொத்தமாக 732 ரன்கள் எடுத்து ஆரஞ்ச் தொப்பியைக் கைப்பற்றினார்.

பிராவோ 17 ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார்.

இறுதிப் போட்டி வரும் 26ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

Read Previous

வில் ஸ்மித், ஜேடன் ஸ்மித் நடிக்கும் ‘அபாய கிரகம்’

Read Next

‘விஸ்வரூபம் – 2’ விரைவில் ஆரம்பம்…