இந்தியத் திரை உலகிலேயே முதன் முறையாக உதவி இயக்குனர்களுக்கு மாதச் சம்பளம் கிடைக்கும் வகையிலான புதிய திட்டத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் துவக்க உள்ளது.
இது சம்பந்தமாக நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சங்கத் தலைவர் விக்ரமன் கூறியதாவது,
“இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு மாதத்திற்குள்ளாகவே உதவி இயக்குனர்களுக்கு மாதச் சம்பளம் கிடைக்க வழி வகுக்கும் இந்த புதிய திட்டத்தை துவக்க உள்ளோம்.
நிறைய உதவி இயக்குனர்கள் சரியான சம்பளம் கிடைக்காமலும், வறுமையில் வாடும் நிலைமையிலும் உள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் விதத்தில் தயாரிப்பாளர்கள் அமைப்புடனும், தொழிலாளர் ஆணையருடனும் பேச்சு நடத்தி புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.
அந்த சம்பளம் நிச்சயம் நியாயமான சம்பளமாக இருக்கும். அதன்படி 2 கோடி ரூபாய் செலவில் தயாராகும் படங்களுக்கு ஒரு சம்பளம், 5 கோடி ரூபாய் செலவில் தயாராகும் படங்களுக்கு ஒரு சம்பளம், 10கோடி ரூபாய் செலவில் தயாராகும் படங்களுக்கு ஒரு சம்பளம்என தரம் பிரித்துள்ளோம்.
இதன் மூலம் உதவி இயக்குனர்களுக்கு அந்த படம் முடியும் வரையில் மாதச் சம்பளம் கிடைப்பதற்கான வழி வகைகளை செய்துள்ளோம்.
இந்தியாவிலேயே முதல் முறையாக திரைப்பட உதவி இயக்குனர்களுக்கு மாதச் சம்பளம் நிர்ணயம் செய்தது தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்தான்.
நடிக்க ஆசை உள்ளவர்களுக்காக இயக்குனர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் விதத்தில் “பிரபலம்’’ என்ற இணையதளத்தை தொடங்க உள்ளோம். நடிக்க ஆர்வம் உள்ளவர்கள் அந்த இணையதளத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்தால், தேவைப்படும் இயக்குனர்கள் அவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள். இதன் மூலம் நடிக்க வாய்ப்புத் தேடி வருபவர்கள் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படும்.
இது மட்டுமல்லாது, வருடத்திற்கு ஆயிரம் கண்கள் தானம், உதவி இயக்குனர்களுக்கு குறும்படம் எடுப்பதற்கான உதவிகள், போன்ற பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக,” விக்ரமன் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் சங்க பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி. சேகர், மற்றும் இயக்குனர்கள் டி.பி.கஜேந்திரன், மனோபாலா, ரவிமரியா, மதுமிதா, ஈ.ராமதாஸ், வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.