கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடித்த ‘பிரியாணி’ திரைப்படம் செப்டம்பர் மாதமே திரைக்கு வந்திருக்க வேண்டியது.
தாமதமானாலும், தீபாவளிக்கு வந்து விடும் என வெங்கட் பிரபுவின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து, ‘பிரியாணி ’ பொங்கலுக்குத்தான் என செய்தி வெளியானது.
இதனிடையே இப்படத்தின் வெளியீடு பொங்கலுக்காவது இருக்குமா என்பதுதான் மிகப் பெரிய சந்தேகமாக எழுந்துள்ளது.
படத்தைப் போட்டுப் பார்த்த கார்த்தி அன்ட் கோ-விற்கு படம் பிடிக்கவேயில்லையாம். பல காட்சிகளை மீண்டும் படப்பிடிப்பு நடத்தி வெங்கட் பிரபுவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வெங்கட் பிரபுவோ அதற்கு சம்மதிக்கவில்லையாம்.
இதனால் பிரச்சனை மேலும் இழுபறியாகிக் கொண்டிருக்கிறது.
தயாரிப்பு நிறுவனமோ, ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடித்த ‘அழகுராஜா’ படத்தின் தீபாவளி வெளியீட்டு வேலைகளில் மும்முரமாகி விட்டது. இப்படத்தின் வெளியீட்டுக்குப் பின்தான் ‘பிரியாணி’யின் நிலைமை தெரியும்.
வெங்கட் பிரபுவோ இதைப் பற்றி இதுவரை எந்த ‘ட்வீட்டும்’ செய்யவில்லை. சும்மாவே எதையாவது ட்வீட் செய்பவர்கள் இந்த பிரச்சனை பற்றி வாயே திறக்காமல் இருக்கிறார்கள்.
‘பிரியாணி’ ரெடியானால் ‘பந்தி’க்கு வந்துதானே ஆகணும்…