‘இமைக்கா நொடிகள்’ தாமதம் ஏன் ?

கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் அஜய் ஞானமுத்து, நடிகை ராசி கண்ணா, ரமேஷ் திலக், படத்தின் தயாரிப்பாளர் சி.ஜெ. ஜெயகுமார் மற்றும் பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் இயக்குனர் அஜய் ஞானமுத்து பேசுகையில்,

“படத்தைத் துவங்கும் போது கதை என்னை திருப்திப்படுத்தும் வரை ஒரு தேடல் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. கதை முடிவான பிறகு கதை தனக்குத் தேவையான நடிகர்களை தானே எடுத்துக் கொண்டது. நான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஆர்டி ராஜசேகர் சாரின் ரசிகன். அவரின் கேரியரில் சிறந்த படமாக என் படம் இருக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன்.

என் படங்களுக்கு தமிழ் தலைப்புகளை வைக்க வேண்டுமென்பதுதான் என் விருப்பம். முதல் படத்தில் அதைச் செய்ய முடியவில்லை. இந்தப் படத்தில் உதவி இயக்குனர் சொன்ன ஒரு தலைப்பு பொருத்தமாக இருந்தது, அதையே வைத்து விட்டோம். குழந்தைகளை நடிக்க வைப்பது ரொம்ப கஷ்டம், அதனால் அந்த மாதிரி படங்கள் செய்து விடக்கூடாது என நினைத்தேன், ஆனால் இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு குழந்தை கதாபாத்திரம் அமைந்தது. அதில் மானசி சிறப்பாக நடித்துக் கொடுத்தார்,” என்றார்.

தயாரிப்பாளர் சி.ஜே. ஜெயகுமார் பேசும் போது,

“இந்தப் படத்தின் நடிகர்கள் ஒவ்வொருவரும் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இங்கு வர முடியவில்லை. இது திடீரென திட்டமிட்ட விழா, இசையமைப்பாளருக்காகத்தான் இந்த விழாவையே நடத்தியிருக்கிறோம். ‘தனி ஒருவன்’ படத்தை ஆதியின் பின்னணி இசைக்காகவே 5 முறை பார்த்தவன் நான்.

எல்லா நடிகர்களையும் தேர்வு செய்து முடித்த பிறகு இயக்குனர் அஜய், நிறைய செலவு பண்ணிட்டீங்க, சின்ன இசையமைப்பாளரே போதும் என்றார். நான்தான் பரவாயில்லை என்று சொல்லி, ஹிப் ஹாப் தமிழாவை ஒப்பந்தம் செய்தேன். தனி ஒருவன் படத்துக்கு பிறகு ஆதியின் மிகப் பெரிய கமெர்சியல் ஹிட் ஆக இந்தப் படம் இருக்கும்.

ராஷி கண்ணா படப்பிடிப்பை கேன்சல் செய்து விட்டு எங்களுக்காக இங்கு வந்திருக்கிறார். அவரைப் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகைகளை தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்கு பிறகு அதர்வாவை வைத்து ஆக்‌ஷன் படம் எடுக்க திட்டமிட்டிருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக படம் பெரிதாகிக் கொண்டே போனது.

நயன்தாரா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். கதைக்காக முடியை வெட்டி, தனது தோற்றத்தை மாற்றி மிகப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். வில்லன் கதாபாத்திரத்துக்கு கௌதம் மேனன் சார் தான் முதலில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தான் அனுராக் காஷ்யாப் நடித்த ‘அகிரா’ படத்தைப் பார்க்க நேர்ந்தது, அவரை அணுகினோம், அவரும் ஒப்புக் கொண்டார்.

நானும் ஆர்டி ராஜசேகரின் பெரிய ரசிகன், அவரை உள்ளே கொண்டு வந்தோம். நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க ஒரு நடிகர் தேவைப்பட்டார், அதை விஜய் சேதுபதி மட்டுமே செய்ய முடியும். அவர் கதாபாத்திரம் தான் கதையின் முக்கியமான விஷயம். 15 நிமிடம் வந்தாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு விடுவார். ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கணும்னுதான் இவ்வளவு தாமதம். திரில்லர், எமோஷன், ஆக்‌ஷன் விரும்புபவர்கள் என எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும். தனது பட வேலைகளுக்கு நடுவிலும் அனுராக் காஷ்யாப் சாருக்கு டப்பிங் பேசிக் கொடுத்த மகிழ் திருமேனி சாருக்கு நன்றி,” என்றார் தயாரிப்பாளர் சி ஜே ஜெயகுமார்.

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா பேசுகையில்,

“படத்தில் வேலை செய்த எல்லோருக்கும் இது மிக முக்கியமான படம். தனது சக்திக்கும் மீறி, ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையால் இந்த மாதிரி ஒரு பிரம்மாண்டமான படத்தை தயாரித்திருக்கிறார் ஜெயகுமார். படத்தில் பின்னணி இசை தான் ஹீரோ, இந்த படத்துக்கு நீ தான் இசையமைக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்கள். பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம். பாடல்களைத் தாண்டி ருத்ரா என்ற தீம் இசை ஹைலைட்டாக இருக்கும். படத்துக்காக தான் நினைத்ததை செய்து முடிப்பவர் இயக்குனர் அஜய்,” என்றார்.

Read Previous

நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ டிரைலர்

Read Next

சிம்பு, வெங்கட் பிரபு இணையும் புதிய படம்