கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த ராகேஷ் உன்னி, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வரும் பெயர்.
கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘விஸ்வரூபம்’ படத்தில் இடம் பெற்ற ‘உன்னைக் காணாத…’ பாடலை ராகேஷ் பாடிய வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வெளியானது.
ராகேஷ் பாடிய அந்தப் பாடலை வீடியோவில் பதிவு செய்து அதை இந்த உலகம் தெரிந்து கொள்ள பகிரச் செய்த அந்த நபருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.
‘விஸ்வரூபம்’ படத்திற்கு இசையமைத்தவர்களில் ஒருவரும், அந்தப் பாடலைப் பாடியவருமான சங்கர் மகாதேவன், அவருடைய டிவிட்டர் தளத்தில் அந்த வீடியோவை சில தினங்களுக்கு முன்பு பதிவிட்டு, இவர் யார், இவரை எப்படி கண்டுபிடிப்பது, இவருடன் பணியாற்ற ஆசைப்படுகிறேன் என்று டிவீட் செய்தார்.
உடனடியாக அவரைப் பற்றிய விவரங்களை ரசிகர்கள் பதிவு செய்தார்கள்.
இந்த விஷயம் ‘விஸ்வரூபம்’ தயாரிப்பாளர், இயக்குனர், நாயகன் கமல்ஹாசனுக்கும் எட்டியது. அவர் ராகேஷ் உன்னியை சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்தித்து அந்தப் பாடலைப் பாடச் சொல்லி கேட்டு மகிழ்ந்தார். அந்தப் பாடல் எந்த அறையில் உருவானதோ அதே அறையில் ராகேஷ் பாடியதைக் கேட்டது பற்றி கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும், பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் ராகேஷ் உன்னியை அறிமுகப்படுத்தி அவருக்கு பெருமை சேர்த்தார்.
தன்னுடைய அடுத்த படத்தில் ராகேஷ் உன்னி பாடுவதற்கு கமல்ஹாசன் வாய்ப்பு தருவதாக அறிவித்துள்ளார்.
ஒரு வீடியோ, ராகேஷ் உன்னிக்கு அற்புதமான அனுபவத்தைக் கொடுத்து, வாய்ப்பையும் வாங்கிக் கொடுத்துள்ளது.
ராகேஷ் உன்னி, ஒரு தோட்டத் தொழிலாளியாக இருந்தும், அவருக்குள் இருக்கும் பாடும் திறமை பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.