ராணா கிரியேசன்ஸ் அம்மன் டெக்ஸ் ஆர்.நமச்சிவாயம் தயாரிக்கும் படம் ‘களவாணி சிறுக்கி’.
இந்த படத்தில் சாமி, திவாகர், சங்கர்கணேஷ் மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அஞ்சு கிரிட்டி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.நமச்சிவாயம் நடிக்கிறார், வில்லனாக கெளரி சங்கர் அறிமுகமாகிறார்.
இப்படத்தை ரவிராகுல் இயக்குகிறார். இவர் ‘ஆத்தா உன் கோவிலிலே, மிட்டா மிராசு, தமிழ்பொண்ணு, மாங்கல்யம் தந்துனானே’ உட்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது.
பொதுவாக தமிழ்ப படங்களின் இசை வெளியீடு சென்னையில் நடக்கும். இல்லை என்றால் வெளிநாடுகளில் நடக்கும். ஆனால், இந்தப் படத்தின் இசை வெளியீடு முதல் முறையாக ஈரோட்டில் நடைபெற்றது. அங்குள்ள சீனிவாசா திரையரங்கில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் படத்தின் இசைளை வெளியிட்டார்.
படம் பற்றி இயக்குனர் ரவிராகுல் கூறியதாவது,
“ஒரு பெண் ஒரு ஆணிடம் பழகுற விதம், நல்ல விதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும், அல்லது தவறான விதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும். அது அவரவர்கள் புரிந்துக்கொள்கிற மனப்பக்குவத்தை பொருத்தது.
கிராமத்தில் இருக்கிற பெண் ஒருத்தி, ஒரு வாலிபனிடம் எதார்த்தமாக பழகுகிறாள். ஆனால் ஒருத்தன் அதைத் தவறாக நினைத்து அவளிடம் தப்பாக நடக்க முயல்கிறான். இதனால் அவன் என்ன பிரச்சனைகளை சந்தித்தான் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை,” என்கிறார் இயக்குனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, கோத்தகிரி, பொள்ளாச்சி, ஈரோடு அதனைச் சுற்றி உள்ள இடங்களில் நடைபெற்றுள்ளது.