தமிழ் சினிமா ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவோ தடைகளைக் கடந்து வந்து கொண்டுதானிருக்கிறது.
ஆனால், இது வரை இல்லாத அளவிற்கு இந்த வருடத்தில் வெற்றி சதவீதம் என்பது மிகவும் குறைந்து விட்டது.
ஏனென்றால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில படங்கள் ஒரு வாரம் மட்டுமே ஓடி அப்படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தன.
100 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்து படம் பார்த்த ரசிகர்களுக்கு அதை விட அதிர்ச்சி ஏற்பட்டது என்றால் அது மிகையில்லை.
இந்த விதத்தில் அமைந்த சில படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
எந்த வித விருப்பு வெறுப்புமின்றிதான் இந்த பட்டியலைத் தருகிறோம். அந்தந்த படத்தின் ஹீரோ மீதும் இயக்குனர் மீதும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்து அந்த படங்களைப் பார்க்க வருகிறார்கள். ஆனால், அவர்களது நம்பிக்கையை பொய்யாக்கி விடுகிறார்கள் இயக்குனரும் , ஹீரோவும்.
இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு ரசிகர்களை ஏமாற்றிய படங்கள்…
1. அலெக்ஸ் பாண்டியன்
2. சமர்
3. கடல்
4. ஆதி பகவன்
5. சேட்டை
6. அன்னக்கொடி
7. மரியான்
8. தலைவா
9. நய்யாண்டி
10. அழகுராஜா
11. இரண்டாம் உலகம்
12. இவன் வேற மாதிரி
இந்த படங்களை நமது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் முதல் நாளே சென்று பார்க்க விரும்பிய படங்கள். அப்படிப் பலர் சென்று பார்த்தவுடன் படத்தைப் பற்றிய கருத்துக்களை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பகிரிந்து கொள்ள அப்படம் பற்றிய நிலவரம் உடனடியாக உலகத்தின் எந்த மூலையிலும் உள்ள ரசிகனை சென்று சேர்ந்து அவர்கள் அந்த படங்களைப் பார்ப்பதற்காக பணத்தை வீணடிக்க விரும்பாமல் திரையரங்கு பக்கமே செல்லாமல் விட்டு விடுகின்றனர்.
முன்பெல்லாம் ‘மவுத் டாக்’ என்று சொல்லக் கூடிய வாய் வழி விளம்பரம் மூலம் நல்ல படங்கள் தொடர்ந்து வெற்றி வாகை சூட வாய்ப்பு இருந்தது. மோசமான படங்கள் கூட ஒரு சில வாரங்களாவது ஓட வாய்ப்பு இருந்தது.
ஆனால், இப்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் படத்தின் இடைவேளை வரை பார்த்து விட்டு கூட கமென்ட் போட ஆரம்பித்து விடுகிறார்கள்.
இவற்றை சரி செய்வது என்பது அந்தந்த இயக்குனர்கள், நடிகர்கள் கையில்தான் உள்ளது. ஏனென்றால் நல்ல படங்களை நமது ரசிகர்கள் வரவேற்கத் தயாராகத்தான் உள்ளனர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு சில படங்கள் நல்ல வெற்றியையும் பெற்றுள்ளன. அந்த பட்டியலையும் தருகிறோம்.
1. கண்ணா லட்டு தின்ன ஆசையா
2. கேடி பில்லா கில்லாடி ரங்கா
3. சூது கவ்வும்
4. நேரம்
5. குட்டிப் புலி
6. தீயா வேலை செய்யணும் குமாரு
7. தேசிங்கு ராஜா
8. ராஜா ராணி
9. பாண்டிய நாடு
10. கல்யாண சமையல் சாதம்
11. தகராறு
இந்த படங்களை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசிகர்கள் போய் பார்த்தனர். ஒவ்வொரு படங்களிலும் ஏதோ ஒரு விஷயம் ரசிகர்களைக் கவர்ந்து மேலே சொன்ன படங்களை வெற்றிப் படங்களின் வரிசையில் சேர்த்தது.
கமர்ஷியலாக வெற்றிப் படங்களாக அமைந்ததா, வசூலை அள்ளிக் குவித்ததா என்றெல்லாம் பார்க்காமல் ஒரு சில நல்ல படங்களும் இந்த ஆண்டு ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளின. அவை,
1. ஹரிதாஸ்
2. பரதேசி
3. சென்னையில் ஒரு நாள்
4. ஆதலால் காதல் செய்வீர்
5. தங்க மீன்கள்
6. மூடர் கூடம்
7. 6 மெழுகுவத்திகள்
8. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
9. விடியும் முன்
போன்ற படங்கள் வியாபார ரீதியில் என்ன சாதித்தது என்பதைக் கணக்கில் கொள்ளாமல், தமிழ் சினிமாவில் சில நல்ல படங்களும் வெளிவருகின்றன என்பதற்கு உதாரணமாய் அமைந்துள்ளன.
இந்த ஆண்டும் ஏறக்குறைய 130 படங்களுக்கு மேல் வெளி வந்துள்ளன. இன்னும் சில நாட்களில் 20 படங்கள் வரை வெளிவர உள்ளன.
படங்களின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் தரமான படங்களின் எண்ணிக்கை என்பது ஒரு 20 சதவீதம் கூட இல்லாதது வருத்தமான விஷயமே.
ஆனாலும், வியாபார ரீதியாக சில படங்கள் நல்ல வசூலையும் பெற்றுள்ளன. அவை,
1. விஸ்வரூபம்
2. சிங்கம் 2
3. ஆரம்பம்
முன்பெல்லாம் ஒரு படம் நான்கு திரையரங்குகளிலாவது நான்கு காட்சிகள் 100 நாள் ஓடினால் மட்டுமே அவற்றை 100 நாள் படங்கள் என்று சொல்வார்கள். பகல் காட்சியாக 100 நாள் ஓடினால் கூட அவற்றை 100 நாள் படம் என்று சொல்ல யோசிப்பார்கள். ‘நூன் ஷோ’ தான 100 நாள் ஓடிச்சி’ என்பார்கள்.
ஆனால், இப்போது முதல் நாள் வசூல், இரண்டாம் நாள் வசூல் என ஒரு சில நாட்களிலேயே படத்தின் வெற்றியைத் தீர்மானித்து விடுகிறார்கள்.
175 நாட்கள் ஓடிய வெள்ளி விழாப் படம் என்பது 90களிலேயே முடிந்து விட்டது. கடந்த சில வருடங்களாக வெள்ளி விழா கொண்டாடிய படம் என்று பார்த்தால் ‘சந்திரமுகி’ மட்டுமே.
இனி நாட்களில் விழா கொண்டாடியது போய், காட்சிகளில் விழா கொண்டாட வேண்டிய காலம் வந்து விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
‘தொடர்ந்து 100 காட்சிகள்’ ‘மாபெரும் வெற்றி’ என்ற விளம்பரங்களை இனி அதிகம் பார்க்க முடியும்.
சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா …… ?
2013 தமிழ்த் திரைப்படப் பட்டியல் – இங்கே ‘க்ளிக்’ செய்யவும்..
