கவிஞர் கண்ணதாசன் காலத்திலேயே, அவருக்கு இணையாக புகழ் பெற்று விளங்கியவர் கவிஞர் வாலி.
அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் ஒலிக்கும் என்றென்றும் ஒலிக்கும். தத்துவப் பாடல்களாக இருந்தாலும் சரி, இன்றைய இளைஞர்களைக் கவரும் விதமான பாடல்களாக இருந்தாலும் சரி அவருக்கு இணை அவரேதான்.
‘மன்னன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே….’ என்ற பாடலை ரஜினிக்காக எழுதி, இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த தாய்ப்பாசம் சம்பந்தமான பாடல்கள் எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்கும் அளவிற்கு அற்புதமான வரிகளைக் கொடுத்தவர் வாலி.
ஆனால், இன்று ‘கோச்சடையான்’ பட இசை வெளியீடு சம்பந்தமான தமிழ் நாளிதழ்களில் வந்த விளம்பரங்களைப் பார்த்த நமக்கு அதிர்ச்சி. அந்த விளம்பரங்களில் வைரமுத்துவின் பெயரை முன்னால் போட்டு, அவருக்குப் பின்னால் வாலியின் பெயரைப் போட்டிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, இசை வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழிலும் வாலியின் பெயர் இரண்டாவதாகத்தான் இடம் பெற்றுள்ளது.
இறவாப் புகழ் பெற்றவர் என்று இருக்கும் போது பாராட்டிவிட்டு, இப்போது இப்படி செய்யலாமா ?
கவிஞர்கள் என்றாலே அவர்கள் அதிகம் எதிர்பார்ப்பது மரியாதையை மட்டுமே. மன்னர்கள் ஆட்சிக் காலத்திலேயே கவி பாடும் புலவர்களுக்கு மன்னர்கள் அவ்வளவு மரியாதை செய்வார்கள்.
ஆனால், இந்த வரலாற்று நாயகனான ‘கோச்சடையான்’ மறைந்த கவிஞர் வாலிக்கு செய்திருப்பது அவமரியாதை அல்லவா ?
ரஜினிகாந்த் படம் என்றாலே அவருடைய சம்மதம் இல்லாமல் எந்த ஒரு செயலும் நடைபெறாது என்று சொல்வார்கள். வாலி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள ரஜினிகாந்திற்கு இந்த விளம்பர விஷயம் தெரியாமல் இருக்குமா ?
அதே அளவிற்கு வாலி மீது மரியாதை வைத்துள்ள சக கவிஞரான வைரமுத்து பார்வைக்குக் கூடவா இந்த விஷயம் வந்திருக்காது ?