கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்தார். அதிமுக ஆட்சியைப் பிடித்ததால், தமிழ்த் திரையுலகினர் அவரை அப்படிவே ஓரம்கட்டி விட்டனர்.
ஏறக்குறைய, 3 ஆண்டுகளா வடிவேலு நடித்த புதிய படங்கள் எதுவுமே வெளிவராமல் காமெடி செய்கிறோம் என்ற பெயரில் புதிது புதிதாக சிலர் தோன்றி நம்மை சோதித்து வருவதுதான் மிச்சம்.
ஆனாலும், சின்னத் திரைகளில் வடிவேலுவின் நகைச்சுவை தொடர்ந்து வருவதால் வீட்டிலாவது கொஞ்சம் சிரிக்க முடிகிறது.
மூன்று ஆண்டு இடைவெளியை தன்னை புதுப்பித்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொண்டேன் என வடிவேலு சொன்னதோடு, ‘தெனாலிராமன்’ என்ற வரலாற்று நகைச்சுவைப் படத்தோடு மீண்டும் ‘ரீ-என்ட்ரி’ கொடுக்க உள்ளார்.
ஏப்ரல் 1ம் தேதி இசை வெளியீடும், கோடை விடுமுறையில் படத்தின் வெளியீடும் உள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
இன்னொரு ‘புலிகேசி’ வெற்றி வடிவேலுவுக்குக் கிடைக்கும் என்று பலர் ‘கமென்ட்’ அடித்தாலும், டிரைலரின் கடைசியில் வடிவேலு பேசியிருக்கும் வசனம், பலரின் புருவங்களை ஆச்சரியத்தில் உயர்த்தியுள்ளது.
“ஒருவன் லட்சியம் நிறைவாகும் வரை, மறைவாக இருப்பதுதான் நல்லது. இது உலகின் அனைத்துப் போராளிகளுக்கும் பொருந்தும் மன்னா…” என்ற வடிவேலு பேசும் வசனத்துடன் ‘தெனாலிராமன்’ டிரைலர் முடிகிறது.
இந்த படத்திற்கு பழம் பெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸ் வசனம் எழுதியுள்ளார்.
டிரைலரில் வடிவேலு பேசியுள்ள வசனம் புதிதாக ஒரு ‘வம்பை’ விலைக்கு வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ‘கமென்ட்’ பரவி வருகிறது.