திரையுலகம் என்றாலே போட்டி, பொறமை அதிகமாக இருக்கும் என்றுதான் பேசிக் கொள்வார்கள்.
ஒரே நாளில் சில படங்கள் வெளிவந்து, ஒரு படத்தின் ரிசல்ட் சரியாக இல்லையென்றால், மற்ற படங்களைச் சேர்ந்த கலைஞர்கள் கூட அந்த படம் ‘அவுட்’டாம், நம்ம படம் நின்னுடும்…என பேசிக் கொள்வது வழக்கம்.
பல காலமாக ஒவ்வொரு படத்திற்கும் தகுந்த இடைவெளி விட்டு ரிலீஸ் செய்தால், அனைத்துப் படங்களுக்குமே நல்லதாக இருக்கும் என்ற பேச்சுக்கு, சில தயாரிப்பாளர்கள் செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.
கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிவர உள்ள ‘மான் கராத்தே, நான் சிகப்பு மனிதன், தெனாலிராமன்’ படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் இந்த மூன்று படங்களையும் வெளியிட வாய்ப்பு இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒன்றன் பின் ஒன்றாக, ஒவ்வொரு வாரமும் படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இது தானாகவே நடந்ததோ, அல்லது திட்டமிட்டு நடந்ததோ, ஆனால் ஒரு ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
அந்த விதத்தில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த ‘மான் கராத்தே’ படம் ஏப்ரல் 4ம் தேதியும், விஷால், லட்சமி மேனன் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ படம் ஏப்ரல் 11ம் தேதியும், வடிவேலு, மீனாட்சி தீட்சித் நடித்த ‘தெனாலிராமன்’ படம் ஏப்ரல் 18ம் தேதியும் வெளிவர உள்ளன.
நல்லதோர் ஆரம்பம்….தொடரட்டும்…
