ட்விட்டரில் ரஜினிகாந்த் – ‘கோச்சடையான்’ காரணமா…? – சிறப்புக் கட்டுரை

rajinikanth in twitter

‘ட்விட்டர்’ தளத்தில் ரஜினிகாந்த் இணைந்தது பற்றித்தான் நேற்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

அது மட்டுமல்ல அணைத்து இணைய தளங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள் என இந்தியா முழுவதுமே பரபரப்பாகப் பேசப்பட்டது.

அதோடு, அது பற்றிய பல ஜோக்குகள் கூட பரிமாறப்பட்டது. பொதுவாக, பிரபலங்களை சமூக வலைத்தளங்களில் ‘ஃபாலோ’ செய்வது என்பதுதான் இருக்கும். அதாவது, ரஜினிகாந்த் ட்விட்டர் கணக்கில் நாம், அவரைப் பின் தொடர்கிறோம் என்பதைத்தான் ‘ஃபாலோ’ எனக் குறிப்பிடுவார்கள்.

அதே சமயம், நேற்று ரஜினிகாந்த் ட்விட்டரில் இணைந்ததை ‘ட்விட்டரே’ ரஜினிகாந்தை ‘ஃபாலோ’ செய்கிறது என்ற கமெண்டே அதிகம் பேரால் பரப்பபட்டது. மேலும், ட்விட்டரோ ‘வெல்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ என ட்விட்டர் செய்தியை வெளியிட்டதும் இந்தியாவில் யாருக்குமே நடக்காத ஒன்று.

இதுதான் ரஜினிகாந்தின் ‘வாய்ஸ்’ என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ரஜினியின் ட்விட்டர் கணக்கு மதியத்திற்குப் பிறகுதான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின், ஒவ்வொரு நொடியிலும், அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது.

ரஜினிகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாது, இந்திய அளவில் பல திரையுலகப் பிரபலங்களும் அவரை ‘ஃபாலோ’ செய்து வருகின்றனர்.

சில மணி நேரங்களிலேயே 1 லட்சத்தைத் தாண்டியது. நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் 1,54,000 பேர் அவரைத் தொடர்பவர்கள் பட்டியலில் இருந்தனர். இந்த செய்தி எழுதும் போது, 1,84,000ஐத தாண்டியுள்ளது. இது இன்னமும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அநேகமாக ட்விட்டரில் அதிக அளவு ‘ஃபாலோ’யர்களை ரஜினிகாந்த் பெற்று முதலிடம் பிடிப்பார் எனத் தெரிகிறது.

அதே சமயம், ரஜினிகாந்தின் இந்த திடீர் வரவு, சில எதிர்மறையான கருத்துக்களையும் எழுப்பியுள்ளது.

அவர் ‘கோச்சடையான்’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காகவே திடீரென ட்விட்டரில் நுழைந்துள்ளார் எனவும் சிலர் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக இம்மாதிரி ‘தெனாலிராமன்’ வெளியீட்டிற்கு முன்னதாக நடிகர் வடிவேலுவும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ வெளியீட்டிற்கு முன்னதாக சந்தானமும் ட்விட்டரில் இணைந்தனர். அவர்களது படங்களைப் பற்றிய செய்திகளை ரசிகர்களுக்குத் தெரிவித்து விளம்பரமும் தேடிக் கொள்கின்றனர்.

பல கோடி ரூபாய் செலவில் தயாராகி, பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடும் வகையில் தயாராகியுள்ள ‘கோச்சடையான்’ திரைப்படத்தை பல்வேறு வகையில் விளம்பரப்படுத்தும் வகையில் இதுவும் சிறந்த விஷயம்தான் என திரையுலகத்தோடு தொடர்புடைய ‘மார்க்கெட்டிங்’ வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

ரஜினிகாந்த் ட்விட்டரில் இதுவரை, ஒரே ஒரு வாழ்த்துச் செய்தியை மட்டுமே பதிவு செய்துள்ளார். அதை 8,000 பேர் ‘ரி-ட்வீட்’ செய்துள்ளனர், 7,400 பேர் ‘விருப்பம்’ தெரிவித்துள்ளனர்.

‘கோச்சடையான்’ வெளியாக உள்ள இன்னும் ஒரு சில தினங்களுக்குள்ளாக ரஜினிகாந்த்தின் ட்விட்டர் மூலம் பல செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.

ரஜினிகாந்தை தொடர்ந்து இதுவரை சமூக வலைத்தளங்கள் பக்கம் கவனத்தை செலுத்தாத சூர்யா ‘அஞ்சான்’ படத்திற்கு முன்னதாகவும், விஜய் ‘கத்தி’ படத்திற்கு முன்னதாகவும், விக்ரம் ‘ஐ’ படத்திற்கு முன்னதாகவும் வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமூக வலைத்தளமான ட்விட்டரில் ரஜினிகாந்தின் வரவு ஒரு புதிய எழுச்சியையும், ஏன் புரட்சியையும் ஏற்படுத்தியுள்ளதென்றே சொல்லாம். இதன் மூலம் மக்கள் தொடர்பு சாதனங்களில், இணையதளங்கள் அபராமான வளர்ச்சியையும், ஒரு முக்கிய இடத்தையும் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

 

Read Previous

நல்ல படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை – தேசிய விருது தயாரிப்பாளரின் வருத்தம்

Read Next

‘வாலு’க்குப் பிறகு ‘ஆளு’…