ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன், நல்ல படங்களை மட்டுமே வாங்கி வெளியிடும், தயாரிக்கும் நிறுவனம் என்ற பெயரைப் பெற்று விட்டது.
அந்நிறுவனத்தின் படமான ‘தங்க மீன்கள்’ படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்ததுதான் அதற்கு அத்தாட்சி.
சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம், சிறந்த பாடலாசிரியர், சிறந்த குழந்தை நட்சத்திரம் – என ‘தங்க மீன்கள்’ படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் விருதுகளை வாங்கிய மகிழ்ச்சியோடு நேற்று பத்திரிகையாளர்களை, ‘தங்க மீன்கள்’ படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ். சதீஷ்குமார், இயக்குனர் ராம், பாடலாசிரியர் நா. முத்துக்குமார், சிறுமி சாதனா ஆகியோர் சந்தித்தனர்.
தயாரிப்பாளர் ஜேஎஸ். சதீஷ் குமார் பேசும் போது,
“நல்ல படங்களுக்கு தற்போது திரையரங்கு கிடைப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. தயாரிப்பாளர்களிடமும், வினியோகஸ்தர்களிடமும் இருந்த சினிமா இப்போது தியேட்டர்காரர்களிடம் போய் விட்டது.
பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே அனைவரும் விரும்பி திரையிடுகின்றனர். சின்ன பட்ஜெட் படங்களையும், இம்மாதிரியான நல்ல படங்களையும் வெளியிடுவதற்கு தியேட்டர்களே கிடைப்பதில்லை.
இந்த பிரச்சனைகளை தீர்க்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முன் வரவேண்டும். ஆனால், அவர்களோ தேர்தலுக்காகவும், பதவிக்காகவும் மட்டுமே மோதிக் கொள்கிறார்கள். ஆந்திராவில் இருப்பதைப் போல வழிமுறைகளை இங்கும் கொண்டு வந்தால், பல தயாரிப்பாளர்கள் பயனடைவார்கள், ” என்றார்.
‘தங்க மீன்கள்’ படத்திற்கு லாபம் தரும் வசூல் கிடைக்கவில்லை என்றாலும், இம்மாதிரியான விருதுகளும், மக்களின் பாராட்டும், தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
ஜே. சதீஷ்குமார், அடுத்தடுத்து ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’, ‘ஆள்’ உட்பட பல படங்களை வெளியிட இருக்கிறார்.