ஒரு சில படங்களின் முதல் பார்வையைப் பார்க்கும் போதே, ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கிறதே என்ற எண்ணம் வரும். அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியுள்ள படம்தான் ‘முண்டாசுப்பட்டி’.
ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணந்து திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை, ராம் இயக்கியுள்ளார்.
முற்றிலும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், ‘அட்டகத்தி’ நந்திதா, காளி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
புகைப்படமே எடுக்கக் கூடாதென கட்டுப்பாடுடன் இருக்கும் ஒரு கிராமத்துக்குள் நுழையும் புகைப்படக்காரர்களான விஷ்ணு விஷால், அவரது உதவியாளர் காளி சந்திக்கும் பிரச்சனைகள்தான் படத்தின் கதை.
புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் நினைத்தார்கள். இப்படியான பல மூட நம்பிக்கைகளை சாடி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் எதையும் கடுமையாகச் சொல்லாமல் நாசூக்காக சொல்லியிருப்பதாகச் சொல்கிறார் படத்தின் இயக்குனர் ராம்.
குறும்படமாக இருந்து பெரிய திரைக்கு வந்துள்ள இந்த படம் வெள்ளித் திரையிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளார்கள் படக்குழுவினர்.
அவர்களது நம்பிக்கை வீண் போகாது என்பது படத்தின் டிரைலரைப் பார்க்கும் போதே தெரிகிறது…
‘முண்டாசுப்பட்டி’ ஜுன் 13ம் தேதி வெளியாகிறது…