தனுஷ், அமலா பால், சரண்யா, சமுத்திரகனி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி’. உன்டர் பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் பி. மதன் வெளியிடுகிறார்.
இந்தப் படம் தனுஷ் நடித்து வெளிவர உள்ள 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ‘பொல்லாதவன்’ படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, “ஆடுகளம், சிறுத்தை, எங்கேயும் எப்போதும், 3, எதிர் நீச்சல், உதயம் என்எச் 4, நய்யாண்டி” உட்பட பல தமிழ், இந்தி, மலையாளம், கன்னடப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த ஆர்.வேல்ராஜ் இந்தப் படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.
தனுஷ் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “தேவதையைக் கண்டேன், யாரடி நீ மோகினி” போன்ற படங்களின் வரிசையில் ஒரு நடுத்தரக் குடும்பத்து இளைஞனனாக இந்தப் படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார்.
ஏற்கெனவே ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் அனிருத் இசையில் பாடல்கள் ஹிட்டாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்திற்கு இன்று சென்சார் முடிந்து அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
அடுத்த வெள்ளி 18ம் தேதியன்று உலகம் முழுவதும் ‘வேலையில்லா பட்டதாரி’ வெளியாகிறது.