ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் விஜய்….?

nanban director shankar and vijay stillஒரு இயக்குனரோ, அல்லது நடிகரோ ஒரு படத்தை முடிக்கும் தருவாயில் இருக்கும் போது, அடுத்து அவர்கள் இயக்கப் போகும் படம் பற்றியோ, நடிக்கப் போகும் படம் பற்றியோ பல்வேறு விதமான செய்திகள் வெளிவரும்.

ஷங்கர் இயக்கி வரும் ‘ஐ’ படம் ஏறக்குறைய முடிவடையும் நிலையில் வந்து விட்டது. இதற்கடுத்து அவர் ‘எந்திரன்’ படத்தின் 2ம் பாகத்தை 250 கோடி ரூபாய் செலவில் ரஜினிகாந்தை வைத்து இயக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின. அதன் பின் ரஜினி நடிக்கவில்லை என்றும் சிரஞ்சீவி அல்லது ஆமிர் கான் நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

நடிகர்களில் அதே போன்ற பேச்சு ரஜினிக்குப் பிறகு அஜித்துக்கு வெளியாகிறது. அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் அடுத்து அவர் நடிக்கப் போகும் படம் பற்றிய செய்திகள் பறக்கத் தொடங்கி விட்டன. அஜித்தும், ஷங்கரும் ஒரு புதிய படத்தில் இணையப் போகிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன. இதற்கு முன் ஷங்கர் ‘நண்பன்’ படத்தை இயக்க முடிவு செய்த பின் விஜய் நடித்த  கதாபாத்திரத்தில் முதலில் அஜித் நடிப்பதாகத்தான் இருந்தது. அதன் பின் அவர் நடிக்கவில்லை, சூர்யா நடிக்கப் போகிறார் என்றார்கள். கடைசியில் அவரும் நடிக்கவில்லை, விஜய்தான் நடித்தார்.

இதுவரை இயக்குனர் ஷங்கர்,  தமிழின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா போன்றவர்களை  படம் இயக்கியதில்லை. விஜய் கூட பல வருடங்களுக்குப் பிறகுதான் ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ படத்தில் நடித்தார். சமீபத்தில் விஜய் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட மேடையிலேயே விஜய் நேரடியாக இயக்குனர் ஷங்கரிடமே “உங்க பாணியில ஒரு படம் பண்ண ‘ஐயாம் வெயிட்டிங் சார்’ என்றார்.

விஜய் ‘கத்தி’ படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ஷங்கர் அடுத்து உடனடியாக படம் இயக்குவதைத் தவிர்த்து, ‘ஐ’ படத்தை கடந்த இரண்டு வருடங்களாக இயக்கியதால் கொஞ்சம் ஓய்வெடுப்பார் என்றும் பேசிக் கொள்கிறார்கள். அதற்குள் விஜய் அடுத்த படத்தில் நடித்து முடித்து விட்டு வந்துவிடுவார், ஷங்கரும் அதற்குள் ஒரு புதிய படத்திற்கு தயாராகிவிடுவார் என்றும் சொல்கிறார்கள்.

இதனால் ‘நண்பன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஷங்கர் – விஜய் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக அது 2015ம் ஆண்டில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.

 

Read Previous

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்

Read Next

‘சாஹசம்’ படத்திற்காக பிரஷாந்துடன் இணைந்த நர்கீஸ் பக்ரி…

Most Popular