‘இவன் தந்திரன்’ படத்திற்குப் பிறகு கண்ணன் இயக்கி வரும் படம் ‘பூமராங்’.
அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
‘மேயாத மான்’ படத்தில் அறிமுகமான இந்துஜா அறிமுகப் படத்திலேயே யார் இவர் எனப் பேச வைத்தவர். அடுத்து, ‘மெர்க்குரி’ படத்திலும் அவருடைய நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். அவருடைய மூன்றாவது படமாக ‘பூமராங்’ அமைந்துள்ளது.
இந்துஜாவின் நடிப்பு பற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது,
“இந்துஜாவின் திறமையைப் பற்றிக் கூற ‘திறமை’ என்ற வார்த்தை மிகச் சாதாரண வார்த்தையாக இருக்கலாம்.
ஒவ்வொரு காட்சியிலும் தன் தன்னிச்சையான நடிப்பின் மூலம் எனது வேலையை எளிதாக்கினார் இந்துஜா. அவரது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதர்வா மற்றும் மேகா ஆகாஷ் கதாபாத்திரங்கள் ‘பூமராங்’ ஸ்கிரிப்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஸ்கிரிப்ட் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் போது, மிகச் சிறப்பான நடிப்பை வழங்கும் இன்னுமொரு கதாபாத்திரத்திற்குத் திறமையான கலைஞர் தேவைப்பட்டது.
இந்துஜா நடித்த இரண்டு படங்களில் அவரது நடிப்பை பார்த்தவுடன், இந்தக் கதாபாத்திரத்துக்கு அவர் உடனடித் தேர்வாக அமைந்தார்,” என்கிறார்.
இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.