ரமேஷ் வினாயகம் அளிக்கும் புதுமை இசை நிகழ்ச்சி

இன்றைய திரை இசையமைப்பாளர்களில் குறிப்பிடும்படியான ஒரு சிறந்த இடத்தில் இருப்பவர் ரமேஷ் வினாயகம் அவர்கள்.

பிரபல இயக்குனர் மௌலி இயக்கிய சில தெலுங்குத் திரைப்படங்களுக்கு இசையமைத்த ரமேஷ் வினாயகம், வசந்த் இயக்கத்தில் உருவான ‘ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படங்களில் தன் கலைப்பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து “நள தமயந்தி, அழகிய தீயே, ஜெர்ரி, மொசக்குட்டி” போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

ஞான ராஜசேகர் இயக்கிய ‘ராமானுஜன்’ திரைப்படத்திற்காக தமிழக அரசு அவருக்கு‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது வழங்கி கௌரவித்தது.

‘காந்தி’ புகழ் கிங் பென்ஸ்லீ நடித்த ஓர் ஆங்கிலப் படத்திற்கும் அவர் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக இசையில் மிகுந்த தேர்ச்சியுடைய ரமேஷ் வினாயகம் தற்போது புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

கர்நாடக ராகங்களில் அமைந்த கிருதிகளை இயற்றி, அவற்றிற்கு இசையமைத்து, இசைக் கருவிகளுடன் ஒருங்கிணைத்து இந்நிகழ்ச்சியை அவர் வழங்கப் போகிறார்.

அக்கிருதிகளை புகழ் பெற்ற இசைக் கலைஞர்களான அருணா சாய்ராம், உன்னி கிருஷ்ணன், அபிஷேக் ரகுராம், ஸ்ரீராம் பரசுராம் மற்றும் அனுராதா ஸ்ரீராம், நித்யஸ்ரீ மகாதேவன், சிக்கில் குருசரண், காயத்ரி வெங்கட்ராகவன், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், திருச்சூர் சகோதரர்கள் ஆகிய கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடப் போகிறார்கள். இதற்காக ரமேஷ் வினாயகத்துடன் 50 இசைக் கலைஞர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை ஹாரிங்டன் சாலை, லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கத்தில் இம்மாதம் 28ம் தேதி, மாலை 6.30க்கு இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Read Previous

கடைக்குட்டி சிங்கம் – விவசாயம் பற்றி கார்த்தி – வீடியோ

Read Next

இந்துஜாவின் சிறப்பான நடிப்பு, இயக்குனர் கண்ணன் பாராட்டு