‘காற்றின் மொழி’ படப்பிடிப்பை முடித்த ஜோதிகா

போப்டா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், ராதா மோகன் இயக்கத்தில், காஷிப் இசையமைப்பில், ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காற்றின் மொழி’.

கடந்த ஜுன் மாதம் 4ம் தேதி ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து நடந்து ஒரே கட்டத்தில் முடிந்துள்ளது.

ஹிந்தியில் வெளிவந்த ‘தும்ஹாரி சுலு’ படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இப்படத்தில் ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ஜோதிகா நடிக்கிறார்.

விதார்த், லட்சுமி மஞ்ச, குமரவேல், எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா, உமா பத்மநாபன், மோகன்ராம உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பின் கடைசி நாளன்று யாரும் எதிர்பாராத வகையில் படக்குழுவினருக்கு தன் சார்பில் பட்டுப் புடவை, பட்டு வேட்டி, சட்டை என அனைவருக்கும் பரிசளித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் ஜோதிகா. படத்தின் உதவி இயக்குனர்களுக்கும் சிறப்புப் பரிசளித்து கௌரவித்தார் ஜோதிகா.

ஜோதிகாவின் அன்பினால் மொத்த படக்குழுவும் நெகிழ்ச்சியடைந்தது. படப்பிடிப்பின் கடைசி நாளான ஜுலை 245ம் தேதியன்று கேக் வெட்டி படப்பிடிப்புக் குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

அப்போது பேசிய ஜோதிகா, இதுவரை தான் பணியாற்றிய படங்களிலேயே இந்தக் குழுவினர்தான் சிறப்பான குழுவினர் எனத் தெரிவித்தார்.

‘காற்றின் மொழி’ படத்தில் ஈடுபாட்டுடனும், நல்ல ஆதரவுடனும் ஒரே கட்டத்தில் நடித்துக் கொடுத்த, ஜோதிகாவிற்கு இயக்குனர் ராதா மோகன், தயாரிப்பாளர் தனஞ்செயன் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

மற்ற நட்சத்திரங்கள் நடிக்க வேண்டிய சில காட்சிகள் அடுத்த சில நாட்கள் படமாக உள்ளன. அதன் பின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது.

படப்பிடிப்பு நடக்கும் போது அங்கேயே படத்தின் எடிட்டிங் வேலைகளையும் முடித்துவிடுகிறார்கள். அதனால், படம் அடுத்து டப்பிங் மற்றும் பின்னணி இசை வேலைகளுக்கு உடனே தயாராகிவிடும். ஆகஸ்ட் 6 முதல் அந்த வேலைகள் ஆரம்பமாகின்றன.

சென்சார் உள்ளிட்ட வேலைகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடித்து அக்டோபர் மாத விழாக் காலத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Read Previous

இந்துஜாவின் சிறப்பான நடிப்பு, இயக்குனர் கண்ணன் பாராட்டு

Read Next

குடும்பப் படமும் எடுக்கத் தெரியும் – சன்தோஷ் பி ஜெயகுமார்