இன்றைய இளம் ரசிகர்களுக்கு சன்தோஷ் பி ஜெயகுமார் என்றால் நன்றாகவே தெரியும்.
‘ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய இரண்டு இளமை ததும்பும் படங்களைக் கொடுத்து வசூலை வாரிக் கொடுத்த இயக்குனர்.
அடுத்து மூன்றாவது படமாக ‘கஜினிகாந்த்’ என்ற குடும்பப் பாங்கான படத்துடன் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வருகிறார்.
‘குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து மக்கள் பார்க்கும்படியான குடும்பப் படத்தை எடுக்கத் தெரியும்’ என நேற்று நடைபெற்ற கஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் அழுத்தமாகப் பேசினார்.
‘‘என்னுடைய முந்தைய படங்களைப் பார்த்து ‘குடும்பத்தோட பார்க்க முடியுமா’ன்னு நிறைய பேர் கொந்தளித்தார்கள். நிறைய பேர் எங்கெங்கேயோ கூட்டம் கூட்டமா கூடிப் பேசினாங்க. ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திற்குப் பிறகு இப்படி நிறைய நடந்தது.
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம், ஒரு அடல்ட் ஹாரர் காமெடி என சொல்லி எடுக்கப்பட்ட படம். அப்படி ‘ஏ’ சான்றிதழ் வாங்கற படம் 18 வயசுக்கு மேல இருக்கிறவங்க பார்க்க வேண்டிய படம். அந்த வயசுக்கு மேல இருக்கிறவர்களுக்கு எந்தப் படத்தை யாரோட பார்க்கணும், பார்க்கக் கூடாதுன்னு தெரியும்.
அவங்களுக்கு முடிவெடுக்கிற அளவுக்கு மெச்சூரிட்டி இருக்கும்கறதாலதான் அந்த ‘ஏ’ சான்றிதழுக்குப் பேரு 18 +. இதைப் புரிஞ்சவங்க யாரும் பேசியிருக்க மாட்டாங்க, புரியாதவங்க பேசினதைப் பத்தி நாங்க கேக்கவும் இல்லை.
இந்த ‘கஜினிகாந்த்’ ஒரு ‘யு’ சான்றிதழ் பெற்ற படம். வருஷத்துக்கு 200 படம் மேல வருது. ஆனால், சன்தோஷ் பி ஜெயகுமார் படம் எடுத்தால் மட்டும் சென்சார்ல என்ன சொன்னாங்கன்னு கேள்வி வருது.
நான் எந்த மாதிரி படங்கள் கொடுக்கணும்னு முடிவு பண்றேன், என்னோட தயாரிப்பாளர்கள் முடிவு பண்றாங்க, நடிகர்கள், நடிகைகள் முடிவு பண்றாங்க. ‘ஏ’ படம் எடுத்தாலும், ‘யு’ படம் எடுத்தாலும், அதை எந்த லெவல்ல எடுக்கணுமோ அப்படித்தான் எடுக்கறேன்.
இந்த படத்தை நீங்க குடும்பத்தோட போய் பார்க்கலாம். போன படத்துக்கு குடும்பத்தோட போகாதீங்கன்னு சொன்னேன். அப்படி நீங்க குடும்பத்தோட போகலைன்னா, திரும்பவும் குடும்பத்தோட போகாத மாதிரி படம் எடுக்க வச்சிடாதீங்க. இந்த மாதிரியான படங்களும் எடுக்கணும்னு நினைச்சிட்டிருக்கேன்.
கண்டிப்பாக நீங்க குடும்பத்தோட இந்தப் படத்தைப் பார்க்கலாம், அதுக்கு நான் உத்தரவாதம்.
ஒரு பையனோட காதலுக்காக அவங்க குடும்பத்தினர் எந்த ஒரு எல்லைக்கும் போவாங்கன்றத காமெடியா ஜாலியா சொல்லியிருக்கோம். ஆர்யா, சாயிஷா, சதீஷ் நல்லா நடிச்சிருக்காங்க. ஒரு குடும்பத்தைச் சுத்தி நகர்ற கதை.
‘கடைக்குட்டி சிங்கம்’ மாதிரி படம் கிராமத்துல எடுக்கப்பட்ட படம், இந்த ‘கஜினிகாந்த்’ சிட்டியில எடுத்த படம்னாலும் எல்லா ஏரியாவுக்கும் ஓடற படமா நிச்சயம் இருக்கும்,” என்றார் சன்தோஷ் பி ஜெயகுமார்.