திருட்டு விசிடியை எதிர்த்து சமீப காலமாக நடிகர்களே களத்தில் இறங்கி வேட்டை நடத்துகிறார்கள். சில வாரங்களுக்கு முன் காரைக்குடியில் கேபிளில் ஒளிபரப்பான புதிய படங்களுக்காக நடிகர் விஷால் போராடினார்.
தற்போது பார்த்திபன் அவரது இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் திருட்டு விசிடியை எதிர்த்துப் போராடினார். இப்படி திரையில் ஹீரோயிசம் காட்டும் நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோயிசத்தை வெளிப்படுத்த துணிந்துவிட்டார்கள்.
இது குறித்து ‘காவியத் தலைவன்’ படத்தின் இயக்குனர் வசந்தபாலன் அவருடைய சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்…
“நேற்று திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால் திருட்டு விசிடிக்காக களத்தில் இறங்கி கண்டுபிடித்தார். இன்று நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் களத்தில் இறங்கி திருட்டு விசிடிகளை கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன சொல்ல வருகிறது. ஒரு படம் ரீலிஸ் ஆனால் அந்தப் பட இயக்குனரும் நடிகரும் களத்தில் இறங்கி போராட வேண்டுமா. இது புதிய வழிமுறையா…
உங்க வீட்டில் திருட்டு நடந்தால் நீங்கள் தான் திருடனை கண்டுபிடிக்கவேண்டும் என்பது புதிய தீர்ப்பா. இங்கு ஒரு திரைப்படம் ஓடவில்லையென்றால் அந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் தான் பாதிக்கப்படுகிறார்கள் வேறு யாரும் இல்லை நண்பர்களே….வேறு யாருமே இல்லை நண்பர்களே…..
முன்கூட்டியே சேட்டிலைட் ரைட்ஸ் வாங்குவதில்லை என்று சேனல்கள் முடிவெடுத்துவிட்டன. படம் வெற்றியடைந்தால் சேட்டிலைட் ரைட்ஸ் வாங்குவோம் இல்லைன்னா சும்மா இருப்போம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். ஆகவே, திரையரங்குகளில் படம் ஓடி வசூலிக்கிற பணம் மிகமிக முக்கியம்.
திரையுலகம் நம் தொழில்நுட்பத்தை இன்னும் கூர்மைப்படுத்தவேண்டும். எல்லா திரையரங்குகளையும் சேட்டிலைட் முலம் இணைக்கவேண்டும். குக்கிராமத்தின் ஒவ்வொரு டிக்கெட் விற்பனையையும் நமக்கு இங்கு சென்னையில் தெரியவேண்டும்.
ஷோ நேரம் தவிர மற்ற நேரங்களில் படம் திரையிட முடியாமல் தடுக்கவேண்டிய கீயை நாம் உருவாக்கவேண்டும். நம் படத்தின் பாடல்களின் டிரைலரின் யு டியுப் ஹிட்களை காசாக்கவேண்டிய வழிமுறையை கண்டு பிடிக்கவேண்டும். ஆக மொத்தம் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு நமக்கு வரவேண்டிய பணம் முழுமையாக நம்மை வந்தடைய வேண்டிய வழியை கண்டு பிடித்தாகவேண்டும். ஏனென்றால் தனியாளாக போராடி திருட்டு விசிடியை தடுக்க முடியாதே,” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.