விவிஆர் சினிமாஸ்க் நிறுவனம் சார்பில் வி.வெங்கட்ராஜ் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’.
சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நகைச்சுவைத் தொடரான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உட்பட பல தொடர்களை இயக்கிய எஸ்.என். சக்திவேல் இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும், சின்னத் திரை நடிகருமான தீபக் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக புதுமுகம் நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், சுப்பு பஞ்சு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சென்ட்ராயன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
A7 என்ற ஒரு புது இசைக்குகுழு படத்திற்கு இசையமைக்க கானா பாலா, யுகபாரதி, கண்ணன் பாடல்களை எழுதியுள்ளனர்.
“எல்லோரையும் எளிதில் கவரும் விதத்தில், மக்களிடையே ஏற்கெனவே பிரபலமான ஒரு சொற்றொடர் தலைப்பாக இருந்தால் படம் மக்களிடையே எளிதில் சென்று சேரும். அதிலும் கதைக்குப் பொருத்தமான தலைப்பாக அமைந்துவிட்டால் அதை விட அதிர்ஷ்டம் வேறில்லை, ” என தலைப்பைப் பற்றி விளக்கம் கொடுக்கிறார் இயக்குனர் சக்திவேல்.
“படத்தின் கதையைக் கேட்டதுமே தயாரிப்பாளர் உடனே படப்பிடிப்புக்குச் செல்லுமாறு கூறிவிட்டார். சமீபத்திய இளைஞர்களின் அன்றாட வாழ்வில் நடக்கும் சில சம்பவங்களின் அடிப்படையில் நகைச்சுவை கலந்து இப்படத்தை உருவாக்கி வருகிறோம். இந்த படத்தின் தலைப்பே படத்தின் கதையைச் சொல்லும்.
வாழ்வில் எல்லா கட்டத்திலும் தோல்வியைச் சந்திக்கும் ஒரு தொலைக் காட்சித் தொகுப்பாளர் எதிர்பாராவிதமாக ஒரு கேளிக்கை விருந்தில் பங்கேற்க நேரிடுகிறது. தன்னிலை மறந்து அவன் இருக்கும் சில நிமிடங்கள் அவன் வாழ்கையை புரட்டிப் போட எத்தனிக்கிறது. அதன் தொடர்ச்சியாகநடக்கும் சம்பவங்களும் அவனுக்கு அந்த நிமிடங்கள் சாதகமா அல்லது பாதகமா என்பதையும் சிரிக்கச் சிரிக்கச் சொல்லி இருக்கிறேன்.
துரித வேகத்தில் படப்பிடிப்பையும் முடித்து, டப்பிங் உள்ளிட்ட இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறோம். ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ முழுக்க முழுக்க எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர் எஸ்.என். சக்திவேல்.