தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் அன்றைய தினத்தில் திரைக்கு வந்து சில மாதங்களே அன பல புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
விஜய் டிவியில் அக்டோபர் 22, புதன் கிழமை, தீபாவளி தினத்தன்று “ நான் சிகப்பு மனிதன், மான் கராத்தே” ஆகிய படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
திரு இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில் விஷால், லட்சுமி மேனன், இனியா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘நான் சிகப்பு மனிதன்’. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படத்தில் விஷால், அதாவது அதிர்ச்சியில் தூங்கி விடும் பழக்கம் கொண்ட ‘நார்க்கோலெப்சி’ என்ற வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘பாண்டிய நாடு’ வெற்றிப் படத்திற்குப் பிறகு விஷால், லட்சுமி மேனன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்த படம் இது.
திருக்குமரன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா மற்றும் பலர் நடித்து வெளியான படம் ‘மான் கராத்தே’. ஃபேன்டஸியான கலகலப்பான காதல் கதையான இப்படத்தில் ‘பாக்சிங்’ என்றால் என்னவென்றே தெரியாத சிவகார்த்திகேயன் ‘பாக்சிங்’ வீரராக ஆனது எப்படி என்பதை சுவாரசியமாகச் சொல்லி வெற்றி பெற்றார்கள். சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா நடித்த இந்தப் படத்தில் அனிருத் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.
‘நான் சிகப்பு மனிதன்’ படம் தீபாவளியன்று காலை 11 மணிக்கும், ‘மான் கராத்தே’ படம் மாலை 6 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது.