பெரிய ஹீரோக்கள் கிடையாது, சூப்பர் ஹிட்டான பாடல்கள் கிடையாது, முக்கிய ஹீரோயின் என்பவர் கூட இடைவேளையின் போதுதான் வருகிறார். பெரிய கம்பெனியின் தயாரிப்பு கிடையாது, என பல இல்லைகளுடன் இயக்குனர் சுந்தர் .சி இயக்கிய ‘அரண்மனை’ படம் 4வது வாரமாக தமிழகம் முழுவதும் வெற்றி நடை போட்டு வருகிறது.
சுந்தர் .சி இயக்கிய முதல் திகில் படமான இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. சமீப காலத்தில் தொடர்ச்சியாக ‘ஹாட்ரிக்’ வெற்றி அடித்த ஒரே இயக்குனர் சுந்தர் .சி தான். இதற்கு முன் இவர் இயக்கிய ‘தீயா வேலை செய்யணும் குமாரு, கலகலப்பு’ ஆகிய படங்களும் வெற்றி பெற்றன. மூன்று படங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை மூன்று படங்களிலும் சந்தானம் இருந்திருக்கிறார் என்பதுதான்.
சுமார் 20 ஆண்டுகளாக வெற்றிகரமான இயக்குனராக சுந்தர் .சி வலம் வந்து கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், சரத்குமார், சத்யராஜ், பிரபு தேவா, அஜித், மாதவன், அர்ஜுன், சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்களை இயக்கியுள்ளார். தற்போது விஷால், ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க ‘ஆம்பள’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் ‘அரண்மனை’யும் ஒரு முக்கியமான படம்.