விழுந்த மிஷ்கினை எழுப்பிய பாலா…

bala and mysskinஇயக்குனர் மிஷ்கின், தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர் என அனைவராலும் பாராட்டப்படுபவர். கமர்ஷியல் மோகம் கொண்ட சினிமா உலகில் ஒரு சிலர் மட்டுமே சினிமாவை ஒரு வேட்கையுடன் பார்த்து படமெடுத்து வருகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களில் குறிப்பிட வேண்டியவர்களான இயக்குனர் பாலாவும், மிஷ்கினும் இணைந்து ஒரு படத்தை தமிழ்த் திரையுலகத்திற்குக் கொடுக்கிறார்கள் என்றார் சும்மாவா.

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என்ற அற்புதமான படத்தைக் கொடுத்து விமர்சகர்களால் பலமாகப் பாராட்டப்பட்டாலும் அந்தப் படம் மூலம் கீழே விழுந்த மிஷ்கினை கை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் படமும் கொடுத்து எழுப்பி நிறுத்தியிருக்கிறார் தயாரிப்பாளர் பாலா.

பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள ‘பிசாசு’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இருவருக்குமிடையேயான பாசப் பிணைப்பை இருவருமே புரிய வைத்தார்கள்.

‘பாலா 200 வருடங்கள் வாழ வேண்டும்,” என்று மிஷ்கினும், “வாடா கூலிங்கிளாஸ்…வந்து பேசு…” என பாலாவும் ஒருவர் மாற்றி ஒருவர் வாழ்த்தியும், அழைத்துக் கொண்டதிலும் எந்த போலித்தனமும் தெரியவில்லை. படம் வெளிவந்த பின்னும் அவர்கள் அதே மாதிரியிருந்தால் தமிழ் சினிமாவில் மேலும் சில தரமான படைப்புகள் வெளிவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

“ஓநாயும் ஆட்டுக்குட்டுடியும்’ படத்தைப் பார்த்துட்டு பாலா சார் எனக்கு போன் பண்ணினாரு. எங்க இருக்கன்னு கேட்டாரு, உடனே ஆபீசுக்கு வான்னு சொன்னாரு. உடனே எனக்கு ஒரு படம் பண்ணு என்றார். அதுதான் இந்த ‘பிசாசு’. அந்தப் படம் பலராலும் பாராட்டப்பட்டாலும் சொல்ல முடியாத சில காரணங்களால் தோல்வியடைய நேரிட்டது. அந்த சூழ்நிலையிலும் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தைக் கொடுத்த பாலா 200 ஆண்டுகள் வாழ வேண்டும், ” என்று வாழ்த்தினார் மிஷ்கின்.

பாலா அடுத்து என்ன பேசப் போகிறார் என பத்திரிகையாளர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்க, வழக்கம் போலவே கேள்விகளுக்கு பதிலாக மீண்டும் கேள்விகளையே பதிலாக அளித்து பத்திரிகையாளர்களையும் குழம்ப வைத்தார் பாலா.

நீங்கள்லாம் பேசவே வேணாம், உங்க படம் பேசினாலே போதும் என்பதே நமது ஆவல்…‘பிசாசு’ பயமுறுத்துவதோடு அல்லாமல் பேசவும் வைக்கட்டும்.

Read Previous

திருடன் போலீஸ் – விமர்சனம்

Read Next

என்னைத் தூக்கி நிறுத்தியவர் எஸ்.ஜே.சூர்யா – விஜய் பேச்சு…