எஸ்.எஸ். புரொடக்ஷன்ஸ் சார்பில் சுப்பையா தயாரித்துள்ள படம் ‘இசை’. எஸ்.ஜே.சூர்யா இயக்கி, இசையமைத்து, நாயகனாகவும் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் விஜய், தனுஷ், சத்யராஜ், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ், விஷ்ணுவர்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் இசையை வெளியிட்டு விஜய் பேசியதாவது,
“எனக்கு ‘குஷி’ படத்திற்கு முன் வாழ்வா சாவா என்கிற நிலை இருந்தது. இந்தப் படமும் ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற கேள்வி இருந்தது. அந்த நேரத்தில் ‘குஷி’ என்கிற வெற்றிப் படம் கொடுத்து என்னை தூக்கி விட்டவர் சூர்யா சார். இப்போது அதற்கு நன்றி சொல்கிறேன். ‘குஷி’ ரீலீசானவுடன் விக்ரமன் சார் கேட்டார் எப்படி விஜய் இதை ஏற்றுக் கொண்டு நடித்தீர்கள் ?, கதை என்ன இருக்கு? கதையே இல்லையே? என்றார். நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் எஸ்.ஜே.சூர்யா என்று ஒருத்தர் இருக்கிறார், என்றேன். அவர் கதை சொல்லிக் கேட்க வேண்டும், அப்படி அசத்துவார். நம்மை அப்படியே வசியம் செய்துவிடுவார். ‘நண்பன்’ சமயம் ‘இசை’ படத்தின் கதையை என்னிடம் சொன்னார், நன்றாக இருந்தது. அவர் தனித்தன்மையான டைரக்டர், இசையமைப்பாளராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார் விஜய்.
விஜய் நடித்த படங்களில் ‘குஷி’ படம் மிக முக்கியமான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு முன் விஜய் நடித்து வெளிவந்த “கண்ணுக்குள் நிலவு, மின்சாரக் கண்ணா, நெஞ்சினிலே, என்றென்றும் காதல்,” ஆகிய படங்கள் தோல்விப் படங்கள்தான். ‘குஷி’ படத்திற்குப் பின் அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக நடித்து தன்னுடைய மார்க்கெட்டை விஜய் நிலை நிறுத்திக் கொண்டார். அந்த சமயம் அஜத் நடித்து வெளிவந்த ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ படம் தோல்விப் படமாகவே அமைந்தது. அஜித்திற்கும் ‘வாலி’ படம் மூலம் ஒரு மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தித் தந்தவர் எஸ்.ஜே.சூர்யா என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
‘இசை’ படத்தின் கதையைப் பற்றி சில சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வர உள்ளது.