திருடன் போலீஸ் – விமர்சனம்

  thirudan police review தமிழ் சினிமாவில் காவல் துறையை மையமாக வைத்து எத்தனையோ அதிரடி, ஆக்ஷன் படங்களைப் பார்த்திருந்தாலும், ஒரு சாதாரண கான்ஸ்டபிளின் கதையை இதுவரை யாருமே இந்த அளவிற்கு ஒரு படமாகக் கொடுத்ததில்லை என உறுதியாகச் சொல்லலாம். சினிமாவுக்கென்றே ஹீரோயிசத்தை தூக்கி நிறுத்தும்படியான போலீஸ் படங்கள்தான் தமிழ் சினிமாவில் வருவது வழக்கம். ஆனால், சென்டிமென்ட் கலந்த நகைச்சுவையுடன் கூடிய ஒரு போலீஸ் படத்தை பார்த்திருக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த ‘திருடன் போலீஸ். அறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜு சினிமாவைப் பார்த்திருக்கும் பார்வை நிறையவே வித்தியாசப்பட்டுத் தெரிகிறது. ஒரு காவல் நிலையம், ஒரு காவலர் குடியிருப்புப் பகுதி இவற்றைச் சுற்றியே படத்தை நகர்த்தியிருக்கிறார். ஒரே பாடலுக்கு மட்டுமே ஊட்டியோ, கொடைக்கானலோ சென்றிருக்கிறார். அந்த அளவிற்கு தயாரிப்பாளருக்கு சிக்கனமான விதத்தில் சிக்கலில்லாமல் நிறைவான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். மற்ற புதுமுக இயக்குனர்களும், புதிய தயாரிப்பாளர்களும் கார்த்திக்கின் வழியைப் பின்பற்றினால், இன்றைய சூழ்நிலையில் தமிழ் சினிமா நன்றாக வளரும். போலீஸ் ஏட்டான ராஜேஷின் மகன் தினேஷ். உதவி கமிஷனரின் மகனையே அடித்துத் துவைக்கும் அளவிற்கு தைரியமானவர். யார் பேச்சையும் கேட்காமல் திமிராகவே நடந்து கொள்பவர். ஒரு என்கௌன்டரில் உதவி கமிஷனரின் திட்டப்படி என்கௌன்டர் குற்றவாளியான ராஜேந்திரனாலேயே, ராஜேஷ் கொலை செய்யப்படுகிறார். அதன் பின் அவருடைய வேலை மகனான தினேஷுக்குத் தரப்படுகிறது. அதே காவல் நிலையத்தில் சாதாரண கான்ஸ்டபிளாக பணியமர்த்தப்படுகிறார் தினேஷ். வேண்டா வெறுப்பாக போலீஸ் வேலைக்குச் சேர்பவருக்கு, உயர் அதிகாரியான உதவி கமிஷனராலும், மற்றவர்களாலும் தரப்படும் எடுபிடி வேலையால் மிகவும் கோபம் வருகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் மறைந்து போன அப்பாவின் கஷ்டத்தை உணர ஆரம்பிக்கிறார். அப்பாவைக் கொன்றவர்களை பழி வாங்கியே தீர வேண்டும் எனத் துடிக்கிறார். அதற்காக வழக்கமான சினிமா ஹீரோ போலெல்லாம் ஹீரோயிசம் செய்யாமல் அவர் எப்படி அப்பாவைக் கொன்றவர்களைப் பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை. ‘அட்டகத்தி’ படத்திற்குப் பிறகு ‘குக்கூ’ படத்தில் தினேஷ் சிறப்பாக நடித்திருந்தாலும் அந்தப் படம் அவருக்கு பெரிதும் கை கொடுக்கவில்லை. ஒரு சில ஹீரோக்களுக்கென்ற சில தனிப்பட்ட கதாபாத்திரங்கள் இருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் அவர்கள் நடித்தால்தான் மேலும் சிறப்பாக இருக்கும். தினேஷுக்கு அப்படி ஒரு கதாபாத்திரமாக இந்தப் படத்தின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் தாடியுடன், அப்படியே ஒரு லோக்கல் ரௌடி போலவே இருக்கிறார். அதன் பின் கான்ஸ்டபிள் வேலைக்குச் சேர்ந்ததும், ஒட்ட வெட்டிய முடியுடன், கிளீன் ஷேவ் முகத்துடன் அப்படியே மாறியிருக்கிறார். குரலில் கூட ஏற்ற இறக்கங்களுடன் அருமையாக நடித்திருக்கிறார். அதிலும், அப்பாவைப் பற்றி வருத்தத்துடன் பேச ஆரம்பிக்கும் போது அவருடைய சோகத்திலும் நம்மைச் சிரிக்க வைப்பது அருமையோ அருமை. படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கும் தினேஷுக்கும் வழக்கமான காதல் காட்சிகள் இல்லையென்றாலும் இவருவரும் அவ்வப்போது பார்வையிலேயே காதைலைப் பரிமாறிக் கொள்கிறார்கள். படத்தில் நாயகனுக்கு அடுத்து அதிகம் ரசிக்கவும், சிரிக்கவும் வைப்பர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்தான். வில்லத்தனத்துல கூட மனுஷன் என்னமா சிரிக்க வைக்கிறார். அதிலும் அவர் பெண் வேடத்தில் அதிரடி பண்ணுவது தியேட்டரையே சிரிக்க வைக்கிறது. இவருக்கடுத்து தினேஷின் நண்பனாக பால சரவணன் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். அதிலும் மேலதிகாரிகளைப் பற்றியும், வசூல் செய்வதைப் பற்றியும் அவர் அடிக்கும் கமெண்ட்கள் அப்படியே அப்ளாசை அள்ளுகிறது. கொஞ்சமே வந்தாலும் ராஜேஷ் பாசமான அப்பாவாக மனதில் இடம் பிடிக்கிறார். ‘ஆடுகளம்’ நரேன், ரேணுகா, ஜான் விஜய் மற்ற கதாபாத்திரங்களில் மனதில் இடம் பிடிப்பவர்கள். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ஒரு பாடல் கூட ரசிக்கும் ரகத்தில் இல்லை, என்ன ஆச்சு யுவன். பின்னணி இசைக்கும் அதிகம் வேலையில்லை. நிறைய புதுப்புது இசையமைப்பாளர்கள் வருவதை யுவன் கொஞ்சம் கவனித்தால் நல்லது. ‘திருடன் போலீஸ்’ – இயக்குனர் கார்த்திக் ராஜுவை தயாரிப்பாளர்கள் விரட்டி பிடிக்கத்தான் போகிறார்கள்…

Read Previous

கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘சூதனம்’…

Read Next

விழுந்த மிஷ்கினை எழுப்பிய பாலா…