விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகர் சரவணன், இயக்குனர் சேரனை மிகவும் தரக் குறைவான வார்த்தைகளால் சண்டை போட்டார்.
“வாய்யா, போய்யா,” என்றும், ‘லூசு’ என்றும் ஒரு அவை மரியாதை கூட இல்லாமல் பேசினார்.
மேலும், நான் ஹீரோவாக இருந்த போது என் வீட்டிற்கு வந்து உட்கார்ந்திருந்த ஒரு சாதாரண உதவி இயக்குனர் என்று ஆணவத்துடன் பேசினார். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே சரவணன், சேரனை அடிக்கடி கிண்டலடித்துப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அவர் உடன் சாண்டி, கவின் ஆகியோரை கூட்டு சேர்த்துக் கொண்டு, ‘என்ன சொல்றாரு, சேரன் செங்குட்டுவன்’ என்று கிண்டலாகப் பேசுவார்.
வளர வேண்டிய கலைஞர்களான கவின், சாண்டி இருவரும் கூட இயக்குனர் சேரனைப் பற்றி புரிந்து கொள்ளாமல் சரவணன் கிண்டலுக்கு ஆதரவாக இருந்தார்கள்.
கடந்த வாரம் மீரா மிதுன், சேரன் மீது அபாண்டமாக பழி சொல்லி, மக்களால் வீட்டைவிட்டு துரத்தப்பட்டார். அதே நிலை சரவணனுக்கு இந்த வாரம் நடக்கும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், கடந்த வாரம் பெண்களை பேருந்துகளில் உரசுவதற்காக சென்றுள்ளேன் என சரவணன் சொன்னதற்கும் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையின் திரைப்பட இயக்குனர் வசந்தபாலன், பிக் பாஸ் வீட்டை விட்டு சேரன் உடனடியாக வெளியேற வேண்டும் என அவருடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
“அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும்.
காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன்.
உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன். வித்யாகர்வத்துடன் நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது.
பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.
திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள்.
காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது.
இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள்.
பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது.
நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய…… உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்ட போது உடனே அதை விட்டு வெளியேறினீர்கள்.
ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை எந்த கீழ்மைக்கும் உட்பட விடுதல் வேண்டாம்,” என பதிவிட்டுள்ளார்.
அவருடைய கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.