விமர்சனங்கள் ஆரோக்கியமானவைதான்…கே.எஸ்.ரவிக்குமார் சிறப்புப் பேட்டி…

director ks ravikumar lingaa working stills_00001‘லிங்கா’ – இதுவரை எந்த ஒரு ரஜினி படத்திற்கும் வந்திருக்காத விமர்சனம் இந்தப் படத்திற்கு வந்திருக்கிறது. சுமார் நான்கு வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் நேரடியாக நடிக்கும் ஒரு திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகம்.

கதையிலேயே இருக்கும் ‘அணை’ என்கிற பிரம்மாண்டம், அதை வைத்து பின்னப்பட்ட காட்சிகள், மிகப் பெரும் நட்சத்திரங்கள், துணை நடிகர்கள் என ஒரு படத்தை ஆறு மாத காலத்திற்குள் திட்டமிட்டபடி முடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது, சவால் நிறைந்த ஒரு விஷயம்.

அப்படிப்பட்ட ஒரு சவாலை ஏற்று, முடித்துக் காட்டியிருக்கிறார்  இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

கடந்த வெள்ளியன்று ‘லிங்கா’ படம் வெளியாகி ஒரு சில நாட்களுக்குள்ளேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்ற தகவல் ஒரு பக்கம்,  மறுபக்கம் படத்திற்கான பலதரப்பட்ட விமர்சனங்கள், சில இடங்களில் படத்திற்கு வசூல் குறைவாக உள்ளது, என பல குரல்களுக்கு மத்தியிலும் ‘லிங்கா’ படம் ரஜினிகாந்த் நடித்துள்ள படங்களிலேயே ஒரு சிறந்த ‘கிளாசிக்’ படம் என உறுதியுடன் தனது குரலை உயர்த்திச் சொல்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

நேற்று நமக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து….

“லிங்கா’ படத்தைப் பத்தி ஒரு சிலர்தான் எதிர்மறையா பேசிக்கிட்டிருக்காங்க. எல்லாரும் விமர்சிக்கிற மாதிரி எல்லாரையும் திருப்திப்படுத்தற மாதிரி ஒரு படத்தைக் கொடுக்க முடியாது. ரஜினியோட ‘படையப்பா’ படம் வெளிவந்த போது ‘முத்து’ படம் மாதிரி ‘படையப்பா’ படம் இல்லன்னு சொன்னாங்க. இப்ப ‘லிங்கா’ பிறகு அந்தப் படங்கள் மாதிரி இந்தப் படம் இல்லைன்னு சொல்றாங்க.

நான் ரஜினி ரசிகர்களுக்காகவும், குழந்தைகளோட குடும்பத்தோட வந்து பார்க்கிறவங்களுக்காகவும்தான் படம் பண்ணியிருக்கேன். சிலர் கிண்டலடிக்கிற மாதிரி ‘கிளைமாக்சை’ வேணும்னேலாம் எடுக்கலை. ஏற்கெனவே ஒரு கிளைமாக்ஸ் சீன் ‘வாட்டர் போட்டிங்’ சீன் யோசிச்சி வச்சிருந்தோம். அது அஜித் நடிச்ச ‘ஆரம்பம்’ படத்துல வந்துடுச்சி. கிளைமாக்ஸ் சீன் பிடிக்கிறன்னு சொல்றவங்க, ரஜினி அவங்க தாத்தா படத்தை தடவிக் கொடுத்துட்டு நகர்வாரு இல்லையா, அதோட தியேட்டரை விட்டு எழுந்து போகட்டும். ஒவ்வொருத்தரையும் திருப்திப்படுத்தற மாதிரி படம் பண்ண முடியாது.

director ks ravikumar lingaa working stills_00003சூப்பர் மேன், ஜேம்ஸ்பாண்ட் இவங்கள்லாம் ஒரு ஆக்ஷன் படத்துல என்ன பண்ணாலும் ஒத்துக்குவாங்க. அவங்களுக்கு மட்டும் என்ன தனி சக்தியா இருக்கு. நான் என்டர்டெயின்மென்ட் படம்தான் பண்றன், அதுல இப்படித்தான் வைக்க முடியும்.

படத்தோட ஆரம்பத்துல எக்கச்சக்கமான கூட்டம், அப்புறம் சில இடங்கள்ல கூட்டம் குறைஞ்சிடுச்சின்னு சொல்றாங்க. ஒரு இயக்குனரா நான் படத்தை இயக்கி சொன்ன தேதியில தர்றதான் முடியும். ஒவ்வொரு ஊர்லயும் அதிகமான தியேட்டர்கள்ல படத்தைப் போடறது, டிக்கட் விலைய ஏத்தி விக்கிறாங்கன்னு சொல்றதுலலாம் நான் தலையிட முடியாது. ஒரு சின்ன ஊர்ல கூட 5 தியேட்டர்ல போடறது யாரோட தப்பு. முன்னாடிலாம், ஒவ்வொரு இடத்துலயும் இவ்வளவு தியேட்டர்லதான் வெளியிடணும்கற ஒரு கட்டுப்பாடு இருந்தது, ஆனால், இப்ப அப்படியில்லையே…எல்லாரும் சேர்ந்துதான் முடிவெடுக்கணும்.

படத்துல ஒரு காட்சி மட்டும்தான் ஒரு ஆங்கிலப் படத்துல இருந்து எடுத்ததுன்னு  சொல்றாங்க. டிஸ்கஷன்ல இருக்கும் போது அப்படி ஒரு நகை திருடற சீன் ஒண்ணு வைக்கணும்னு நினைச்சோம். அப்ப ஒரு உதவி இயக்குனர் இதை மாதிரி ஒரு காட்சி, நான் ஒரு படத்துல பார்த்திருக்கன்னு சொன்னாரு. அவர் சொன்னதை வச்சி டிஸ்கஸ் பண்ணி வேற மாதிரி அந்தக் காட்சியை எடுத்தோம். அப்புறம்தான் அது ஒரு ஹாலிவுட் படத்துல இருந்ததுன்னு அந்த சீனைக் காட்டினாங்க. முதல்ல நீங்க சொல்லியிருக்கக் கூடாதான்னு அவங்ககிட்ட சண்டை போட்டேன்.

அப்புறம் பென்னி குயிக்குக்கு நன்றி கூட போடலையேன்னு சொன்னாங்க. இது அப்படியே பென்னி குயிக் கதை கிடையாது. பொன். குமரன் இந்தக் கதையை வந்து என் கிட்ட சொல்லும் போது ஒரு ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படம் மாதிரியா தெரிஞ்சது. ரஜினி ரசிகர்களுக்காகவும் படத்துல ஒரு இளமையான கேரக்டரை வச்சி, அப்புறம் அவரை கலகலப்பான, ஜாலியான ஒரு திருடன்னு இன்னொரு கேரக்டரை உருவாக்கினோம். முழுமையான பென்னி குயிக் கதையா இல்லாததனாலதான் அவருக்கு நன்றி கார்டுலாம் போடலை.

director ks ravikumar lingaa working stills_00004நான் இதுவரைக்கும் 45 படத்துக்கும் மேல பண்ணிட்டேன், சில படங்கள் சரியா போகலை, ஆனாலும் அந்தப் படங்களையும் நான் எனக்குப் பிடிச்சிதான் பண்ணேன். நான் பிடிக்காம பண்ண ஒரே படம் ‘சாமி’ படத்தோட ஹிந்தி ரீமேக்தான். ‘ராணா’ ஆரம்பிச்ச பிறகு ரஜினி சார் மருத்துவமனையில இருந்ததால் அந்தப் படத்தை அப்ப தொடர முடியலை. அப்புறம் ரஜினி சார் சொன்னதாலதான் ஹிந்தி ரீமேக் பக்கம் போனேன். அங்க ‘சாமி’ ஹிந்தி ரீமேக் முடியற நேரத்துல சஞ்சய் தத் பத்து நாளைக்குள்ள ஜெயிலுக்குள்ள போயிடணும்கற ஒரு நிலைமை.

தயாரிப்பாளர் வந்து என்கிட்ட பல கோடிகள் செலவாகிடுச்சி சார், பத்து நாளைக்குள்ள படத்தை எப்படியாவது முடிச்சிக் கொடுத்துடங்கன்னு சொன்னாரு. அதனால தமிழ்ல  விஜயகுமார் பண்ண கேரக்டரை அமிதாப் வச்சி எடுக்க திட்டமிட்டிருந்தேன், அதையெல்லாம் எடுக்கவேயில்லை. பிளாஷ்பேக் காட்சிகள் இல்லாம, நான் நினைச்சபடி பண்ண முடியாம அவசரத்துல முடிச்ச படம் அது. அந்தப் படத்தைத் தவிர என்னோட எல்லா படமுமே எனக்குப் பிடிச்ச படங்கள்தான்.

‘லிங்கா’வுக்கு சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. விமர்சனங்கள் ஆரோக்கியமானவைதான். அவர்கள் சொல்வதை நாமும் எடுத்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்ளலாம். ஒரு படம் வெளியான பின் பொதுவாக யாரும் பத்திரிகையாளர்களை சந்திக்கத் தயங்குவார்கள், ஆனால் நான் அப்படியில்லை. உங்களைச் சந்திப்பதும்  அதற்காகத்தான்…

அமிதாப் பண்ணுவது போன்ற முற்றிலும் மாறுபட்ட படங்களை ரஜினியை வைத்து இயக்கலாமே….என நாம் கேட்டதற்கு…“அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வந்தால் கண்டிப்பா நான் பண்ணுவேன். ஆனால், அந்த மாதிரி கதாபாத்திரங்கள்ல நடிக்கிறதப் பத்தி ரஜினி சார்தான் முடிவு பண்ணணும். அவர் அப்படி ஒரு முடிவு எடுத்தார்னா, ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ மாதிரியான படங்களை நானும் எடுக்க ஆசைப்படுவேன்,” என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.

‘லிங்கா’ படமும் கண்டிப்பாக ரஜினிகாந்தின் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும். அதற்கேற்றபடி அந்தப் படத்தில் உள்ள ராஜா லிங்கேசுவரன் கதாபாத்திரம் மீது அனைவருக்குமே ஒரு மரியாதை வந்திருக்கிறது. அந்தக் கதாபாத்திரம் ரஜினியின் முந்தைய கிளாசிக் படங்களின் கதாபாத்திரங்களின் வரிசையில் கண்டிப்பாகச் சேரும்.

எல்லோருக்கும் மீண்டும்  ‘ஆறிலிருந்து அறுபதுவரை, முள்ளும் மலரும்’ மாதிரியான ரஜினிகாந்தைப் பார்க்க நிறையவே ஆசை உள்ளது. அப்படிப்பட்ட நடுநிலையான குடும்பத்து ரசிகர்களின் ஆவலையும் ரஜினிகாந்த் நிறைவேற்றுவாரா….?

Read Previous

‘இன்று நேற்று நாளை’ – புதுமையான முயற்சி…

Read Next

Rana Daggubati of ‘Baahubali’ to Attend Comic Con, Mumbai