அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் மற்றும் பலர் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டிரைலர் 1ம் தேதி பிறந்த நிமிடத்தில், அதாவது சரியாக 12.01- மணிக்கு யு டியுப் இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டது.
புத்தாண்டைக் கொண்டாடும் வேலைகளைக் கூட ஒதுக்கி விட்டு, அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் அந்த டிரைலருக்காகக் காத்திருந்தனர். அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளேயே லட்சக் கணக்கான ரசிகர்கள் அந்த டிரைலரைப் பார்த்து வழக்கம் போல மேலும் ஒரு சாதனையை புரிய வைத்து விட்டனர்.
இப்போது வரை ‘என்னை அறிந்தால்’ டிரைலரை சுமார் 16 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர். அந்த டிரைலருக்கு ‘லைக்’ கொடுத்தவர்கள் மட்டும், 48,000 பேர்.
இப்படித்தான் சில வாரங்களுக்கு முன் வெளியான ‘என்னை அறிந்தால்’ டீசரும் ஒரே நாளில் பார்த்தவர்களின் எண்ணிக்கையிலும், லைக் கொடுத்தவர்களின் எண்ணிக்கையும் சாதனை புரிந்திருந்தது.
‘ஐ’ படத்தின் டிரைலர் இரண்டு வாரங்களுக்கு முன் வெளிவந்தது, அந்த டிரைலரை இதுவரை 57 லட்சத்திற்கும் கூடுதலாகப் பார்த்துள்ளனர். ஆனால், அந்த டிரைலருக்கு இதுவரை 47,000 லைக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. அந்த டிரைலரின் ‘லைக்’ சாதனையையும் முறியடித்து தற்போது ‘என்னை அறிந்தால்’ டிரைலர் புதிய சாதனை ஒன்றைப் புரிந்துள்ளது.
இணைய தளங்களில் அஜித்தின் ரசிகர்களின் ஆர்ப்பாட்டம்தான் அதிகம் என்பதை இந்த அடுத்தடுத்த சாதனைகள் மீண்டும் நிரூபித்துள்ளன.